வாமனர் யாசகம் பெற்ற போது, அதை தாரை வார்த்து கொடுப்பதற்காக மகாபலியின் மனைவி விந்தியாவளி கிண்டியில் (கெண்டி) இருந்து தீர்த்தம் வழங்கினாள். அந்த தீர்த்தம் கையில் பட்டதும் வாமனர் திரிவிக்ரமராக மாறி உலகத்தை அளக்கத் தொடங்கினார். அவரது திருவடி பிரம்மாவின் உலகமான சத்தியலோகத்தை அடைந்தது. திருவடியைக் கண்ட பிரம்மா, தன்னுடைய கமண்டல தீர்த்தத்தை அபிஷேகம் செய்து பாதபூஜை செய்தார். பின், அந்த திருவடி, அண்டத்தைச் சென்றடைந்தது. அண்டத்தைச் சுற்றி ஆவரணஜலம் என்ற தீர்த்தம் உண்டு. அதுவும் வழியத்தொடங்கியது. கையில் வாங்கிய கிண்டித்தீர்த்தம், பிரம்மாவின் அபிஷேக தீர்த்தம், ஆவரண தீர்த்தம் மூன்றும் சேர்ந்து நேர்கோட்டில் விழுந்தது. இதில் பிரம்மாவின் அபிஷேக தீர்த்தமே மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர்கோவில்) நூபுர கங்கையாகக் கொட்டுவதாக ஐதீகம்.