Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்கவரும் யானை பட்டாளம் பெண்ணின் பெருமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இளமையில் கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2022
10:09


 கலை என்னும் சொல்லில் இருந்து தோன்றியது கல்வி. கல்வி என்பது அறியாமை இருளை அகற்றி ஒளி கொடுப்பதாகும். ஒருவன் கல்வி கற்றவன் என்றால் ஒழுக்கம், பண்பு, அடக்கம், பணிவு ஆகிய குணங்கள் கொண்டவனாக இருத்தல் வேண்டும். சாதாரணமாக கிராமங்களில் நீயெல்லாம் படிச்சபுள்ள தானா? என்று கேட்பார்கள். காரணம் படித்தவர்களிடம் ஒழுங்கீனம் இருக்காது? இருக்கக் கூடாது என்பது சமுதாய எதிர்பார்ப்பு. ஆனால் இன்றைய நிலை என்ன? படித்தவன் தான் சட்டமீறல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்கின்றான். காரணம் கடந்த ஒரு நுாற்றாண்டாக வெறும் பொருள் ஈட்டக் கூடிய கல்வியை அவர்களுக்குத் தருகிறோம் என்பதே உண்மை. அதனாலேயே நாம் சந்திக்கும் ஒழுக்கக் குறைவான நடைமுறை சிக்கல்கள்.
    நமது சனாதன தர்மம் என்னும் ஹிந்து சமயம் மனிதனின் வாழ்வை நான்காகப் பிரித்தது. கல்விக் காண பருவம் (பிரம்மசர்யம்) இல்லறத்திற்கான பருவம் (கிருஹஸ்தாச்ரமம்) துறவுக்கு தயாராகும் பருவம் (வானப்ரஸ்தம்) துறவுநிலை (சந்நியாசம்) எனப் பகுத்தனர். இதில் கல்விக்கான பருவத்தில் மனிதன் வாழ்வியல் கலை முழுவதையுமே கற்றல் வேண்டும். இது நம் குருகுல முறையில் இருந்தது. மன்னர் வீட்டுப்பிள்ளையும் சாதாரண ஏழையும் ஒரு குருவிடத்திலேயே கண்ணன் குசேலன் போல ஒன்றாகப் பயின்றனர். அங்கே பாகுபாடுகளே கிடையாது. நம்மைப் பிரித்தாள வந்த அந்நியரே கட்டுக்கதைகளைக் கட்டி நம்மைப் பிரித்து அடிமைப்படுத்தினர்.
    கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். சுவாமி விவேகானந்தர் நமது உள்ளிருக்கும் ஆற்றலை வெளிக் கொணர்வதே கல்வி என்கிறார். மணற்கேணி தோண்டத் தோண்ட எவ்வாறு நீர் சுரக்குமோ அதுபோல கற்கக் கற்க ஒருவனுக்கு அறிவு சுரக்கும். அறிவு என்பது வேறு. மொழி என்பது வேறு. நாம் இப்போது ஆங்கிலத்தையே அறிவு என குழப்பிக் கொண்டிருப்பதால் தான் தாய்மொழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலக் கல்விக் கூடங்கள் புற்றீசல் போல் வளர்ந்திருக்க காரணம்.
    ஒருவன் இளமைக் காலத்தில் பிழையறக் கற்றுவிடுவானேயாகில் அதுவே அவன் வாழ்வை மேம்படுத்திவிடும். எனவே தான் திருவள்ளுவரும் கற்க கசடற என்னும் குறளில் துணைக்கால் இன்றியே எழுதியிருப்பார். காரணம் இளமையில் பிழையறக் கற்ற ஒருவனால் யாருடைய துணையின்றித் தனித்து நிற்க இயலும் என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்லுகிறார்.
    கல்வி மட்டுமே ஒருவரை அரசனுக்கு இணையாக வைத்திட முடியும். வெள்ளை அரியாசனத்து அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாய் என்பது தமிழர் பாடல். மகாபாரதத்தில் துரியோதனன் நமக்குத் தெரிந்து ஒரெயொரு இடத்தில் தான் நல்லது பேசியிருப்பான் ஆம். பாண்டவர், கவுரவர் இடையே நடக்கும் போட்டிகளில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என கர்ணன் கேட்ட போது துரோணர் அவனது குலம் கேட்டு மறுத்து விடுவார். அப்போது எழுந்த துரியோதனன், ‘கற்றவர்களுக்கும், அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் பெற்று அதன்படி வாழ்பவர்களுக்கும் சாதி கிடையாது. எனவே கர்ணன் சுத்த வீரன். அவனைச் சாதியைக் காரணம் காட்டி மறுக்கக் கூடாது’ என்பான். இன்று நாம் நடைமுறையிலேயே உயர்பதவியில் இருப்பவர்களை யார் எனக் கேட்டு வீட்டிற்குள் அனுமதிக்கிறோமா என்ன? அவர் கற்ற கல்வியே எல்லாத் தடைகளையும் தகர்த்து விடுகிறது.
    கல்வி ஒருவனைப் பன்முகத் திறமையுள்ள மனிதனாக மாற்றிட வேண்டும். இன்று போல் வெறும் மனப்பாடம் செய்யும் மிஷினாக அல்லது எப்போது விடுமுறை விடுவார்கள் எனக் காத்திருந்து நீச்சல், கராத்தே, குங்பூ என விருப்பமில்லாமல் எல்லா வகுப்பிலும் பிள்ளைகளைச் சேர்த்து படுத்துவது அல்ல கல்வி. ஒருவன் பேச்சின் மூலமே அவனது, கல்வி, பணிவு, செயல்திறன், ஆற்றல் ஆகியன உணரப்பட வேண்டும். ராமாயணத்தில் அனுமன் முதன் முதலாக ராமனைச் சந்திக்கும் போது தன்னை அறிமுகம் செய்து கொள்வான். அந்த அறிமுகக் கலையைப் பார்த்தவுடனே இவன் வேதக் கடலாக அல்லவா இருக்கிறான். இந்த சொல்லின் செல்வன் பிரம்ம தேவனா? அல்லது சிவபெருமானா? என்று வியந்து போற்றுவார். காரணம் அனுமன் காலம் என்னும் சூரிய தேவனிடத்தில் வேதம் கற்றவன்.
    ஒரு மகாராணி தன் தம்பியை மந்திரியாக ஆக்க எண்ணினாள். ராஜாவிடம் அவ்வப்போது நச்சரித்து வந்தாள். ராஜாவும் பொறுமையாக காத்திரு... சொல்கிறேன் என்றார். ஒரு நகர எல்லையில் மந்திரியுடன் நிற்கும் போது மகாராணியையும், அவள் தம்பியையும் அழைத்து வரச் சொன்னார். அவர்கள் வந்ததும் ராணியின் தம்பியைப் பார்த்து அதோ போகிறதே... அந்த வண்டியைப் பார்த்து வா என அனுப்பினார். அவன் போய் வண்டியை சும்மா பார்த்துவிட்டு வந்தான். அதில் என்ன போகிறது என்று கேட்பார். மீண்டும் ஓடினான். திரும்பி வந்ததும் எத்தனை மூட்டை என்றார். மீண்டும் ஓடினான். ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி வந்து பதில் சொன்னான். சற்று தொலைவில் நின்ற மந்திரியை அருகில் அழைத்து வண்டியைப் பார்த்து வாருங்கள் என்றார். மந்திரி பார்த்துவிட்டு வந்து சொன்னார் மன்னா! வணக்கம். அந்த வண்டி பக்கத்து நாட்டில் இருந்து வருகிறது. அதில் நெல் மூட்டைகள் இருபது உள்ளன.  மகாராணிக்குப் பிடித்தமான நெல்வகை என்பதால் அரண்மனைக்குச் செல்கிறான். அவன் நமது நாட்டின் எல்லையைக் கடக்கும் போது உரிய வரியைச் செலுத்தி உள்ளான். அந்த வண்டியை ஓட்டுபவன் பெயர் குமரன். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் விவசாயத்துடன் வாள் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றுள்ளான் என்றார்.
    மகாராணியும், அவளது தம்பியும் வியந்து போனார்கள். இதுதான் கற்றவனுக்கும், மற்றவருக்கும் உள்ள வேறுபாடு ஆகும் என்றார் மன்னர். கல்வி பெறுவது என்பது நுண்ணறிவு பெற்ற தன்மையாக இருத்தல் நலம். கல்வி என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு குழந்தைகளின் பால பருவத்தையே பறித்து விடுகிறோம்.
    எல்.கே.ஜி. படிப்பதற்காக ஒரு குழந்தை காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு துாங்கிக் கொண்டே முப்பது கிலோ மீட்டர் பயணிக்கிறது. அங்கே போனதும் இக்குழந்தையிடம் உள்ள சிற்றுண்டியை பறித்து திட்டிக் கொண்டே ஊட்டி விடுகிறாள் ஆயா. உண்ட உணவு நேரத்திற்கு சிறுநீர், மலம் கழிக்க இயலாத சூழல், அல்லது சொல்ல இயலாத பயம். ஆசிரியை பி.ஓ.ஒய்... பாய்... எனக் கத்த குழந்தையோ ஆய் மிஸ் என தன் பிரச்னையைச் சொல்ல... நோ... நோ.... பாய்.... தான். ஆய் இல்லை என்கிறாள் மிஸ்.
    இத்தகைய போராட்டம் தேவையா என எண்ணிப் பார்க்க வேண்டும். ஐந்து வயதில் தான் ஒரு குழந்தைக்கும் பென்சில் பிடித்து எழுதும் பக்குவம் வருகிறது என்கின்றனர் மனநுாலார். ஆனால் எல்.கே.ஜி. யிலேயே எழுதினால்....
    கல்வியை சிறுவயதிலேயே எந்தச் சூழலானாலும் கற்க வேண்டும். பிச்சை புகினும் கற்கை நன்றே... பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் எனத் தமிழ் கூறுகிறது. மகாகவி பாரதியார் எப்படி படிக்க வேண்டும் என அழகாகச் சொல்கிறார். காலையில் எழுந்தவுடன் படிக்க வேண்டும். மனதைக் கனிவாக ஆக்கும் பாடலைப் பாட வேண்டும். மாலை நேரம் முழுவதும் உடல், மனதை உறுதி செய்ய விளையாட வேண்டும் (கம்ப்யூட்டர் கேம் அல்ல) என்கிறார். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதும் நாம் துாங்கும் நேரம் குறைந்து விட்டது. செல்போன் வந்த பிறகு இரவு விழிப்பதும், காலையில் மிகத் தாமதமாக எழுவதும் இந்த தலைமுறைக்கு சர்வ சாதாரணமாகி விட்டது என்பது வருந்தத்தக்க உண்மை.
    இன்றைய சூழலில் கல்வி கற்பதற்காக, அதுவும் ஏழை, எளியவர்கள் கற்பதற்காக அரசாங்கம் பலவகையிலும் சலுகைகளை அள்ளி வழங்கி வருகிறது. கல்விக்குக் கட்டணம் இல்லை. புத்தகம், நோட்டு, சீருடை, காலணிகள் என அனைத்தும் இலவசமாகத் தருகிறார்கள். மதிய உணவு பள்ளியிலேயே முட்டையுடன் வழங்கப்படுகிறது. மேல்வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், லேப் டாப் என அனைத்தும் தடையின்றிக் கற்க விலையின்றி தரப்படுகின்றது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு கல்வி கற்றிட வேண்டும்.
    ஏனெனில் கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும். கல்வியே ஒருவனது குடும்பத்தை மேம்படுத்தும் என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள். ராமேஸ்வரத்தில் பேப்பர் போட்டுத் தன் உழைப்பின் மூலம் முன்னேறத் துடித்த சிறுவன் தொடர்ந்து தந்தை, தமக்கை உதவ விஞ்ஞானியாகி, நாட்டின் எழுச்சி மிக்க குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாம் வரலாறை உலகம் அறியும்.
    ஏழ்மை, சூழல் எல்லாம் புறம் தள்ளி கற்று அதன் மூலம் என் குடும்பத்தை, நாட்டை முன்னேற்றுவேன் என ஒருவன் முன் வந்தால் அவனுக்காக தெய்வம் தன் ஆடையை மடித்துக் கட்டிக் கொண்டு உதவத் தயாராக இருப்பதாக திருவள்ளுவர் கூறுகிறார். ‘இளமையில் கல்’ அவ்வையின் நற்சொல். இப்போதே விழித்தெழுவோம். கல்வியின் மூலம் இந்திய நாட்டை வல்லரசாக்குவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar