பதிவு செய்த நாள்
12
செப்
2022
01:09
நம் வீட்டிலோ, நாம் நடத்தும் வியாபாரத்திலோ, பள்ளிக்கூடத்திலோ ஒருவர் வந்து உட்கார்ந்து, உங்கள் வருமானத்தை என்னிடம் கொடுங்கள். இனி நான் சொல்லியபடி தான் செலவு செய்ய வேண்டும்.
எங்கள் தலைவர் சொல்லும் திட்டங்களுக்கு தான் பணம் முதலீடு செய்ய வேண்டும். இனி நான் தான் இங்கு பணியாளர்களை நியமிப்பேன் என்றால், நமக்கு எவ்வளவு கோபம் வரும்? மேலும் அவர், இந்த செலவுகளை நானே தணிக்கை செய்வேன். இதற்காக நீங்கள், உங்கள் மொத்த வருமானத்தில் 12 சதவீதம் நிர்வாக கட்டணமாகவும், 4 சதவீதம் தணிக்கை கட்டணமாகவும் தர வேண்டும் என்றால், நாம் கோபத்தில் உச்சிக்கே சென்று விட மாட்டோம்? யாரைய்யா நீ? உன்னை எவன் கூப்பிட்டான்? எங்கள் நிர்வாகத்தை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். அதேபோல் திறமையான பட்டய கணக்காளர்கள் வைத்து தணிக்கை செய்யவும் தெரியும்.உங்கள் சீர்கெட்ட நிர்வாகத்திற்கு வருமானத்தில் 12 சதவீதம், உபயோகமற்ற தணிக்கைக்கு 4 சதவீதம் என, ஒருபோதும் தண்டம் அழ மாட்டோம் என்று தானே சொல்லுவோம்!
அதிகாரிகள் வேடிக்கை: ஆனால் பாருங்கள்... தமிழக அரசு, ஹிந்து சமுதாயங்களுக்குச் சொந்தமான கோவில்கள், திருமடங்கள், அறக்கட்டளைகள் இவற்றை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, பணம் சம்பாதித்தபடியும், தன் துறையை வளர்த்தபடியும், கோவில் வருமானத்தை மடை மாற்றிக் கொண்டும் இருக்கிறது. இவற்றை 70 ஆண்டுகளாக ஹிந்து சமுதாயங்கள், தங்கள் வழிபாட்டு நிலையங்களில் மத, நிர்வாக உரிமைகளை, சட்ட மோசடியாக இருந்து வரும் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தாரை வார்த்து விட்டு, வேடிக்கை பார்த்து வருகின்றன.
இதில் முதல் அநியாயம், தமிழக அரசு, ஹிந்து கோவில்களில் விதிக்கும் கட்டாய நிர்வாக கட்டணமாகவும், தணிக்கை கட்டணமாகவும், மொத்த வருமானத்தில் தரும் 16 சதவீத கட்டாய கட்டணம். இது கிட்டத்தட்ட வருமானத்தில் 6ல் ஒரு பகுதி. இதன் பின்புலத்தை சற்று பார்ப்போம். கடந்த 1920ல் துவங்கி 17 ஆண்டுகள் மதராஸ் மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக் கட்சி, 1926ல் ஹிந்து கோவில்களையும், திருமடங்களையும், அறக்கட்டளைகளையும் குறிவைத்து, ஹிந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் 69ம் பிரிவின் படி, மடங்கள் உள்ளிட்ட ஹிந்து சமய அறநிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 1.5 சதவீதம் ஹிந்து சமய வாரியத்திற்கு கொடுக்க வேண்டும். அறிவிக்கை செய்யப்பட்ட கோவில்கள், 3 சதவீதம் கொடுக்க வேண்டும். தணிக்கை செய்ய எவ்வளவு செலவு ஆயிற்றோ, அதை கொடுக்க வேண்டும்.
சட்ட விரோதம்: கடந்த 1951ம் ஆண்டு சென்னை மாகாண அரசு, ஹிந்து சமய அறநிலைய சட்டம் ஒன்றை புதிதாக இயற்றி, வாரியத்தை கலைத்து, ஹிந்து சமய அறநிலையத் துறைஎன்னும் அரசு துறையை உருவாக்கியது. அந்த சட்டத்திலும் 3 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஷிரூர் மடமும், சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் திருக்கோவிலும், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுத்தன.
அந்த வழக்கின் தீர்ப்பில், 1951ம் ஆண்டு சட்டத்தில் 20 பிரிவுகளை உயர் நீதிமன்றம், இவை அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு விரோதம் என்று சொல்லி ரத்து செய்தது.மூன்று சதவீத கட்டணப் பிரிவை ரத்து செய்யும் போது, இதை நிர்வாக கட்டணம் என்று அரசு சொல்கிறது. கட்டணம் என்பது ஒருவருக்கு செய்யும் சேவைக்கோ அல்லது கொடுக்கும் பலனிற்கோ விதிக்கப்படுவது. இதை கட்டாயமாக்க முடியாது. கட்டாயப்படுத்தி பெறும் பலனிற்கு தொடர்பில்லாத தொகை விதிப்பை வரி விதிப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு ஆண்டு செலவு தொகையை ஈடுசெய்யும் அளவில், இந்த தொகை விதிக்கப்படவில்லை. இது நேரடியாக அரசு கஜானாவிற்கு செல்கிறது. எனவே இது ஹிந்து கோவில்கள் மீது விதிக்கப்படும் கட்டாய வரி தான். இது சட்ட விரோதம் என்று சொல்லியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதராஸ் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வும், இந்த தொகை வரி விதிப்பு தான்; கட்டணம் இல்லை என்று உயர் நீதிமன்ற தீர்ப்பை 1954 ஏப்ரலில் உறுதி செய்தது. அப்போது நிர்வாக கட்டணம் 5 சதவீதமாக, அரசால் உயர்த்தப்பட்டு இருந்தது.
சட்டத் திருத்தம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், அரசு சட்டத் திருத்தம் ஒன்றை 1954ல் கொண்டு வந்தது.அதன்படி, திருக்கோவில்களும், ஹிந்து மத நிறுவனங்களும், அரசுக்கு பதிலாக, நிர்வாக கட்டணத்தை அறநிலையத் துறை ஆணையருக்கு செலுத்த வேண்டும். அவர் அதை தனி நிதியாக நிர்வகித்து, அறநிலையத் துறை செலவினத்திற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். அதாவது மூக்கை நேராக தொடுவதிற்கு பதில் தலையைச் சுற்றி தொடுவதை தான் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இதன் பின் வந்த வழக்குகளில், நிர்வாக கட்டணம் விதிப்பது சரிதான் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. நிர்வாக கட்டணமும் படிப்படியாக உயர்ந்து, தற்போது 12 சதவீதம் என்ற நம்ப முடியாத, அநியாய கட்டணமாக இருக்கிறது. இவர்கள் கோவில்களில் இருப்பதே சட்ட விரோதம். ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், மதுரை போன்ற 50 முக்கிய கோவில்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னும் சட்ட விரோதமாக இருந்து வருகிறது இந்த துறை. இதைத் தவிர திருத்தணி, உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, மயிலை கபாலீஸ்வரர் போன்ற கோவில்களில் செயல் அலுவலர் நியமனம் செய்யாமலேயே 50, 60 ஆண்டுகளாக சட்ட விரோதமாக இருந்து வருகிறது
அறநிலையத் துறை. கடந்த 1986ல் இருந்து 47 ஆயிரம் ஏக்கர் கோவில் விளை நிலங்கள் காணாமல் போயுள்ளன. நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக, இதற்கு அறநிலையத் துறையால் பதில் சொல்ல முடியவில்லை. 1.3 லட்சம் ஏக்கர்களுக்கு ஆவணங்கள் இல்லை என்று தற்போது சொல்கிறது அறநிலையத் துறை.கோவில் அசையா சொத்துக்களில் இருந்து ஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வர வேண்டும். ஆனால், இந்தத் துறை வசூலிப்பதோ, 150 கோடி ரூபாய் தான். இந்த மோசமான நிர்வாகத்திற்கு அரசு எடுத்துக் கொள்ளும் தொகை ஆண்டிற்கு 270 கோடி ரூபாய்.
லாபம் பார்க்கும் அரசு: அதாவது, இவர்கள் நிர்வாகத்தால் கோவில்களுக்கு ஆண்டுதோறும் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் தான். பத்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டு பாருங்கள், தலையை சுற்றும். 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒழுங்காக வந்திருந்தால், ஹிந்து கோவில்கள் மூலம் இலவச கல்வியும், இலவச மருத்துவ வசதியும் லட்சக் கணக்கானோருக்கு அளித்திருக்கலாம். குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கும்.அறநிலையத் துறை செய்யும் தணிக்கை வெளி தணிக்கை கிடையாது; உள் தணிக்கை மட்டுமே. இவர்களிடம் ஒரு பட்டய கணக்காளர் கூட கிடையாது.
இந்த உள் தணிக்கையில் சொல்லப்பட்ட குறைபாடுகள், 1986ம் ஆண்டு முதல் தீர்க்கப்படாமல், 15 லட்சம் தணிக்கை குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மிக மோசமான நிலை. கோவில் பணம் கொள்ளை போயுள்ளது என்று, இவர்கள் தணிக்கையே சொல்கிறது. ஆனால், தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆணையரும், அமைச்சரும், அரசும் 35 ஆண்டுகளாக உள்ளனர். இந்த மோசமான தணிக்கைக்கு கட்டணமாக ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் வசூல் செய்கிறது அறநிலையத் துறை. ஆனால், தணிக்கை துறையின் செலவு 20 கோடி ரூபாய் தான். அதாவது ஆண்டுதோறும் கோவில் பணத்தில் அநியாயமாக, 70 கோடி ரூபாய் தணிக்கையில் மட்டும், லாபம் பார்க்கிறது தமிழக அரசு.
வாடகை தருவதில்லை: அது மட்டுமா? தணிக்கைத் துறைக்கு குளிர்சாதன இயந்திரங்கள் வாங்க லட்சக்கணக்கில் கோவில் பணத்தை எடுத்துள்ளனர். தணிக்கை துறை இயங்கும் இடம் திருமடங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள கட்டடம். இதற்கு சுத்தமாக வாடகை தருவதில்லை. இவற்றிற்கு எல்லாம் அறநிலையத் துறை ஆணையரும் உடந்தை. இப்படிப்பட்ட தணிக்கை பிரிவு, கோவில்களில் செய்யும் தணிக்கை எப்படி இருக்கும்; யோசித்து பாருங்கள். மாற்றம் வேண்டும். மாற்றத்தை சட்டப்பூர்வமாக கொண்டு வருவோம். விரைந்து செயலாற்றுவோம். --டி.ஆர்.ரமேஷ், ஆலய வழிபடுவோர் சங்க தலைவர்