பதிவு செய்த நாள்
14
செப்
2022
06:09
நம்மில் பலரும் வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பது சொந்த வீடு. கனவெல்லாம் வீடு. வீடெல்லாம் கனவு என்ற இலக்கை நோக்கி ஓடுவதுதான் நடைமுறை. பங்களாக்களை பார்க்கும்போதெல்லாம், ‘இதுமாதிரி நாமும் எப்போது கட்டப்போகிறோம்’ என்று மனக்கோட்டை கட்டுபவரா நீங்கள்.. உங்களுக்காகவே நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டியில் காத்திருக்கிறார் கந்தகிரி முருகன்.
வானத்துக்கும், பூமிக்குமான விஸ்தீர்ணமான மலை. அடர்த்தியான மரங்கள். பசுமைச்செடி, பூக்கள். இவைகளுக்கு ஊடே பறந்து விளையாடும் வண்ணத்துப்பூச்சி. ஒவ்வொரு இலையிலும் பனித்துளி. பாறைகளுக்கு இடையே செழிப்பான கொடிகள் என நமது கண்களை நிறைக்கும் இடம்தான் கந்தகிரி.
கள்ளம் கபடம் இல்லாத குழந்தையானவர் முருகன். அவ்வையிடம் சுட்டப்பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா என்று புன்னகை பூத்த மன்னன். அவனிடம் குழந்தை தன்மையும் உண்டு. ஞானமும் உண்டு. சூரசம்ஹாரம் செய்யும் வீரனாகவும் இருப்பான். தன்னை நாடி வருவோருக்கு அன்பும் காட்டுவான். இந்த காட்சிகளை எல்லாம் நாம் கோயிலுக்கு செல்லும் முன்பே பார்த்துவிடலாம். ஆமாம்.. அவ்வளவு சிலைகளும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
இப்படி பல காட்சிகளை பார்த்தவாறே, 195 படிகளை கடந்தவுடன் கோயில் தெரியும். உள்ளே நுழைவதற்கு முன் சின்னஞ்சிறிய விநாயகர், இடும்பன் நம்மை வரவேற்பர். அதற்கு பிறகு சின்ன சின்னதாய் இருக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் அழகன் முருகனின் புன்சிரிப்பை காணலாம். அவரை பார்த்தவுடனேயே வேண்டுதல் மறந்து, முருகனின் அழகு நம் மனதில் வியாபித்து நிற்கும். பிரகாரத்தின் துாய்மை, அங்கு வரும் பக்தர்களின் மனத்துாய்மை என துாய்மையின் பிறப்பிடமாக உள்ளது கோயில். கார்த்திகை, சஷ்டியில் முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். முன்பு கரடு என்று அழைக்கப்பட்ட இக்கோயில், வாரியாரால் கும்பாபிேஷகம் செய்யப்பட்டு ‘ஸ்ரீகந்தகிரி’ எனப்பெயர் சூட்டப்பட்டது.
சரி. வாருங்கள். சொந்த வீடு கனவு நனவாக என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். தொடர்ந்து மூன்று கார்த்திகை இங்கு வாருங்கள். அவரே புதிய வீடு கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தி தருவார். அறுபடை வீட்டுக்கும் சொந்தக்காரரான அவர், உங்களையும் ஒரு வீட்டுக்கு சொந்தக்காரனாக மாற்ற மாட்டாரா...
எப்படி செல்வது: நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம்
நேரம்: காலை 8:30 – 12:00 மணி, மாலை 4:30 – 7:30 மணி