பதிவு செய்த நாள்
20
செப்
2022
11:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: பீட்டா அமைப்பின் புகாரின் எதிரொலியாக அஸ்ஸாம் மாநில உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவின் செயல்பாடுகள், உடல்நிலையை அஸ்ஸாம் மாநில அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
2011 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து, ஒரு தனியார் டிரஸ்ட் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு ஜெயமால்யதா என்ற யானை வழங்கப்பட்டது. இதனை ஆண்டாள் கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. வாரம் தோறும் கால்நடைத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை குறித்து பரிசோதித்து வருகின்றனர். இந்நிலையில் 2021ல் தேக்கம்பட்டியில் நடந்த முகாமில் யானையை பாகன் ராஜா தாக்கிய வீடியோவும், அதன் பின்பு நியமிக்கப்பட்ட பாகன் திருப்பதி யானையை குளிப்பாட்டும் போது அடிக்கும் வீடியோவும் வெளியானது. இதனையடுத்து பீட்டா என்ற அமைப்பின் புகாரின் பேரில் யானையை திரும்ப பெற அஸ்ஸாம் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் யானையை அம்மாநில அதிகாரிகள் குழுவினர் நேரடியாக பார்வையிட தமிழக அரசு அனுமதிக்க, அஸ்ஸாம் மாநில உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அஸ்ஸாம் மாநில கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் ஹிர்தேஷ் மிஸ்ரா, பத்மபூஷன் விருது பெற்ற வன உயிரின பேராசிரியர் கே.கே.சர்மா, பேராசிரியர் ரூப்ஜீத் ககாதி, போலீஸ் எஸ்.பி. அபர்ணா நடராஜன் ஆகிய நான்கு பேர் குழுவினர் நேற்று காலை 11:00 மணிக்கு அத்திகுளம் ரோட்டிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தனர். அவர்களுடன் தமிழக கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், டாக்டர் சுகுமார், அந்தோணி ரூபன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் வந்தனர். அங்குள்ள குளியல் தொட்டியில் யானை குளிப்பதை நேரடியாக பார்வையிட்டு போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்தனர். யானைக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து கால்நடைத்துறை மருத்துவர்களிடமும், உணவுகள் குறித்து யானைப்பாகன்களிடமும், யானைக்குரிய ஆவணங்கள் குறித்து கோயில் அதிகாரிகளிடமும் கேட்டறிந்தனர். பின்னர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு அஸ்ஸாமிற்கு புறப்பட்டு சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய்த்துறை, கால்நடைத்துறை, வனத்துறை, காவல்துறையினர் உடனிருந்தனர்.
ஆண்டாள் பக்தியில் அஸ்ஸாம் அதிகாரிகள்: அஸ்ஸாம் மாநில அதிகாரி குழுவில், போலீஸ் எஸ்.பி. அபர்ணா நடராஜன் மட்டும் மதுரையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அஸ்ஸாமை சேர்ந்தவர்கள். இந்நிலையில் ஆண்டாளை தரிசித்த அதிகாரிகளுக்கு கோயில் சார்பில் மாலை, கிளி, வஸ்திரம் ஆண்டாள் போட்டோ வழங்கப்பட்டது. இதனை ஒரு பையில் வைத்து, உதவியாளர்களிடம் கூட தராமல் அதிகாரிகள் மிகுந்த பக்தியுடன் தங்கள் கைகளிலே வைத்திருந்தனர். கோயில் உட்பிரகாரத்தில் வரையப்பட்டிருந்த திவ்யதேச படங்களை பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டனர். ஆண்டாள் திருப்பாவை புத்தகத்தை அஸ்ஸாம் மாநில ஐ.எப்.எஸ். அதிகாரியான ஹிர்தேஷ் மிஸ்ரா ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து ஆண்டாள் திருப்பாவையை வாசித்தார்.