பதிவு செய்த நாள்
20
செப்
2022
11:09
சென்னை : விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் தொன்மையான நான்கு சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அமைந்துள்ள மரோமா நிறுவனத்தில், தொன்மையான உலோக சிலைகள், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.அதைத் தொடர்ந்து, விற்பனை நிலையத்தை சோதனை செய்ய, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் அனுமதி பெறப்பட்டது. பின், திருச்சி சிலை திருட்டு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., கதிரவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், மரோமா நிறுவனத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதில், தொன்மையான சிவகாமி அம்மன் உலோக சிலை, ஆஞ்சநேயர் கற்சிலை, நாக தேவதை கற்சிலை, இடது பக்கம் உடைந்த நிலையில் மார்பளவுக்கு மேல் உள்ள சிவன் கற்சிலை ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.இந்த நான்கு சிலைகளுக்கும் எந்தவித ஆவணமும் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. எந்த கோவிலுக்கு சொந்தமான சிலைகள் என விசாரணை நடந்து வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.நான்கு தொன்மையான சிலைகளை மீட்ட தனிப்படையினரை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி ஆகியோர்பாராட்டினர்.