பட்டிவீரன்பட்டி: செங்கட்டாம்பட்டி முனியப்பசாமி கோயில் திருவிழா மூன்று மணி நேரத்தில் நடந்து முடிந்தது.
செங்கட்டாம்பட்டியில் முனியப்பசாமி கோயில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. பொதுவாக திருவிழா பகலில் நடைபெற்று இரவில் கலை நிகழ்ச்சி நடப்பது வழக்கமாகும். ஒரு சில இடங்களில் இரவு முழுவதும் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் இங்கு சாமி சாட்டியது முதல் எவ்வித கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது கிடையாது. திருவிழா நாளில் இரவு 9:00 மணிக்கு பூசாரிகள் அழைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி, பொங்கல் வைத்தல் முடி காணிக்கை செலுத்துதல் கிடாய் வெட்டுதல் ஆகிய நிகழ்வுகள் மூன்று மணி நேரத்திற்குள் திருவிழாவே முடிந்து விடுகிறது. இந்த அரிய நிகழ்ச்சியை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் திரள்வதால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு துவங்கிய விழா 12 மணிக்கு ஆகாச பூஜையுடன் முடிவடைந்தது. பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.