பதிவு செய்த நாள்
02
அக்
2022
07:10
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா, 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இதில், ஐந்தாம் நாளன்று சீமந்தபுத்திரி அலங்காரமும், 10ம் நாளன்று பிள்ளைப்பெற்ற பேரரசி அலங்காரமும், வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐந்தாம் நாள் உற்சவமான சீமந்தபுத்திரி விழா விமரிசையாக நடந்தது.
உற்சவர் மற்றும் மூலவர் அம்மன் இருவருக்கும் கர்ப்பிணியர்போல சீமந்தபுத்திரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் சீமந்தபுத்திரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. கர்ப்பிணியருக்கு சீமந்தம் சடங்கின்போது செய்வதைப்போல், அம்மனின் கைகளுக்கு பெண்கள் வளையல் அணிவித்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும், ஆரத்தி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.காஞ்சிபுரம் மட்டுமின்றி பல்வேறு வெளியூர்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். * காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெரு தென்கோடியில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவை ஒட்டி குறத்தி அலங்காரத்தில் எழுந்தருளிய கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், ஊஞ்சல் சேவையில் பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.