பழநி மலைக்கோயில் நவராத்திரி விழாவில் வன்னிகாசூரன் வதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 07:10
பழநி: பழநி நவராத்திரி விழாவை முன்னிட்டு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் வன்னிகாசூரன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் முருகன் கோயிலில் செப்., 26 காப்பு கட்டுதல் உடன் நவராத்திரி விழா துவங்கியது. நேற்று (அக்., 4ல்) மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணிக்கும்,சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடைபெற்றது. பக்தர்கள் மலைக் கோயிலுக்கு மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மலைக் கோயிலில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு பின் நிகழ்ச்சி தொடர்ந்தது. மாலையில் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து கோதைமங்கலம், கோதீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
அங்கு வன்னி மரம், வாழை மரத்தில் வன்னிகாசூரன் வதம் நடைபெற இருந்தது. இதில் கோவில் அதிகாரி தாமதமாக வந்தார். இதனால் பக்தர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வன்னிகாசூரன் வதம், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திசை அம்பு செலுத்துவதில் கோயில் அதிகாரி ஈடுபடவில்லை என ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.