பதிவு செய்த நாள்
05
அக்
2022
07:10
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, 10ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. சக்தியாக தோன்றிய அம்பாள், அசுரர்களை அழித்து விட்டு, சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி
அளித்தது, விஜயதசமி அன்று தான்!
ஒன்பது இரவுகளில் அம்மனை வழிபட்டு, தம்மிடம் உள்ள குற்றங்களை நீக்கி, நன்னடத்தை பெற்று உயர்ந்த ஞானத்தை அடைந்து, இறுதியில் 10வது நாள் பகலில் நற்பலன்களை பெற்ற தன் அடையாளமாக, வெற்றியைக் கொண்டாடி அம்மனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
நவராத்திரியின் முதல் நாள் - பாவை
இரண்டாம் நாள் - குமாரி
மூன்றாம் நாள் - தாருணி
நான்காம் நாள் - சுமங்கலி
ஐந்தாம் நாள் - சதகாடி
ஆறாம் நாள் - ஸ்ரீவித்யா
ஏழாம் நாள் - மகாதுர்கை
எட்டாம் நாள் - மகாலட்சுமி
ஒன்பதாம் நாள் - சரஸ்வதி என, ஒன்பது வடிவில் காட்சியளிக்கும் அம்பிகை, விஜயதசமி 10ம் நாள் - சர்வ சக்தி ஐக்கிய ரூபிணியாக தரிசனமளிக்கிறாள் என்கின்றன புராணங்கள்.
அம்பிகை மகிஷனை வதம் செய்து, வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமியன்று, காலையில் சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும். தியானம், ஆவாஹனம் முதலியவையை ஏற்கனவே செய்திருப்பதால், சுருக்கமாக மற்ற உபசாரங்களைச் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்து, துாப தீபம் காட்டி, வீட்டு வழக்கப் படி, சுத்த அன்னம், சுக்கு நீர் முதலியவற்றையோ அல்லது மஹா நைவேத்தியத்தையோ நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பிரதட்சிண நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும். பிறகு ஆரத்தி எடுத்துவிட்டு, பூஜையின் போது ஏற்பட்டிருக்கும் குற்றம் குறைகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டும்.
பூஜை முடிந்த உடனோ அல்லது மாலையிலோ சாஸ்திரத்திற்கு இரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டு, கொலுவை எடுத்து வைத்து விடலாம், சில ஊர்களில், ஸ்வாமி அம்பு போடும் வழக்கம் உண்டு. அம்பு போடப் புறப்பட்டுவிட்டு திரும்பும் முன், பொம்மைகளை படுக்க வைப்பர். அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்து செய்து கொள்ளலாம். முறையாக கலசஸ்தாபனம் செய்து பூஜிப்பவர்கள், விஜயதசமியன்று சுமங்கலி பூஜை, வடுக பூஜை முதலானவற்றை நடத்தி, விருந்தினர்களுக்கு உணவளித்த பின்னே சாப்பிடுவர்.
விஜயதசமி அன்று எந்த செயல் துவங்கினாலும், அது வெற்றியில் தான் முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்காக உள்ளது. இதனால், விஜயதசமி அன்று கல்வியை துவங்கும் 3 வயது குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்து சென்று ஏடு துவங்கப்படுகிறது. கோவிலில் சுவாமி முன்னிலையில் தாத்தா - பாட்டி ஆகியோரின் மடியில் குழந்தையை அமர வைத்து, எதிரில் தட்டில் அரிசியை பரப்பி வைத்து, குழந்தையின் கையை பிடித்து அரிசியில் அ, ஓம், அம்மா, அப்பா... என்று எழுத கற்றுத் தரப்படுகிறது. இதையே ஏடு துவங்குதல் என்று
கூறுகின்றனர். அதுவும் விஜயதசமி அன்று துவங்கினால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை; சிலர் புதிய தொழில்களையும் துவங்குகின்றனர்.
துர்கை அம்மனின் அம்சமாக விளங்கும் வன்னிமரத்தை வலம் வந்து, பெண்கள் நவராத்திரி பூஜையை நிறைவு செய்வது வழக்கம்; நெருப்பு அடங்கிய வன்னிமரம், ஆத்மாவுடன் கூடிய மனித உடலாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்பு விடுவதை ஞானோபதேசமாகவும் கொள்ள வேண்டும் என, உட்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. சக்தியின் மகிமையை அறியாத மகிஷனின் அட்டகாசம், மூவுலகிலும் தலை துாக்கியது. அவனை அழிக்க, தன் நெற்றிக்கண்ணைத் திறந்து, அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்கையைத் தோற்றுவித்தார் ஈசன். சிம்ம வாகனத்தில், ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி, சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு,10ம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவசம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்ட தேவர்கள், தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லாருடைய பயங்களையும் போக்கி, அபயம் தந்து, அசுரர்களை அழித்து, ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது, நவராத்திரியின் ஆரம்ப நாட்களில் தான்!புதிய தொழில் துவங்குவதும், முதன்முதலில் குழந்தைக்கு கல்வி கற்றுக் கொடுப்பதும், விஜயதசமி நாளில் தான். ஆக மொத்தத்தில், நவராத்திரி என்பது கூட்டு வழிபாட்டு முறையை வலியுறுத்தும் முக்கிய விழாவாகும். ஒன்பது சக்திகளாய், முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும், மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
தென்னிந்தியாவில் மகிஷாசுரனை சக்தி வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படும் அதே சமயத்தில், வடமாநில பகுதிகளில் ராமன் ராவணனைக் கொன்ற நாளாக ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி, ராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரின் உருவப்பொம்மையை ராமர் வேட
மணிந்து, அம்பெய்யப்பட்டு எரியூட்டுகின்றனர். மைசூரில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து, ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என்று அப்போதைய மன்னர் காலத்திலிருந்து, தற்போது வரையிலும் கடைப்பிடித்து வரப்படுகிறது.
நவராத்திரி வழிபாட்டின்போது செல்ல வேண்டிய கோவில்கள்ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், பிறவி மருந்தீஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில், திருநின்றவூர் மரகதாம்பிகை கோவில். உடலின் சீர் நிலைக்கு சுண்டல் பிரசாதம்; உள்ளத்தின் சீர் நிலைக்கு சக்தி ஆராதனை; உயிர் சீர் நிலைக்கு சண்டி ஹோமங்கள் என, காக்கும் அரணாக நவராத்திரி வைபவங்கள் கொண்டாடப்படுகிறது.