வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா இரு ஆண்டுகளுக்கு பின் நேற்று வெகு சிறப்புடன் நடந்தது.
நேற்று முன்தினம் முத்தாலம்மனுக்கு கோயில் மைய மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். நள்ளிரவு 02:30 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தேர் திருவிழா நிறுத்தப்பட்டிருந்ததால், மூன்றாம் ஆண்டான நேற்று ஏராளமான பக்தர்கள் போட்டி போட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சென்ற வழி முழுவதும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், உருவ பொம்மைகளை காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் அம்மனை வழிபட்டனர். நேற்று மதியம் 1:30 மணியளவில் தேர் நிலையம் சேர்ந்தது. அங்கு மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, தேரிலிருந்து அம்மன், கோயிலுக்கு எழுந்தருள செய்தனர். மாலையில் மஞ்சள் நீராட்டும், இரவு மாவிளக்கு வழிபாடும், அம்மன் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு ஆற்று நீரில் கரைப்பதற்காக அம்மன் எடுத்துச் செல்லப்பட்டார். அப்போது அம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு பிரியா விடை வழங்கி விடை பெற்றார். பக்தர்கள் அம்மன் மீது பூக்களை தூவி வணங்கினர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். வத்திராயிருப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு நடந்த தேரோட்ட திருவிழாவினால் வத்திராயிருப்பு பஜார் வீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.