பதிவு செய்த நாள்
15
அக்
2022
11:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு அக்.,21ல் ஹிந்து அறநிலைதுறை அமைச்சர், செயலாளர், ஆணையர் வரவுள்ளதால், கருநிறத்தில் காட்சியளித்த வெள்ளி தேர், திருவாச்சியை ஊழியர்கள் புதுப்பித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முதல் பிரகாரத்தில் மழைநீர் செல்லும் வாறுகாலை உடைத்ததால், சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. இதற்கு அமைச்சர், உயர் அதிகாரிகள், கோயில் அதிகாரிகளை கண்டித்து உள்ளனர். மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு வசதிகளை ஏற்படுத்தாமல், வணிக ரீதியாக கோயில் நிர்வாகம் செயல்படுவதை ஹிந்து அமைப்பினர எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ராமேஸ்வரம் கோயில் அவலம் குறித்து அக்., 21ல் அமைச்சர் சேகர்பாபு, ஹிந்து அறநிலைத்துறை செயலாளர், ஆணையர் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக பல ஆண்டுகளாக கருநிறத்தில் காட்சியளித்த வெள்ளி தேரை புதுப்பிக்க ஓராண்டுக்கு முன்பு அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், அமைச்சரின் வருகையால் தற்போது ரசாயன கலவையில் வெள்ளி தேரை புதுப்பிக்கின்றனர். மேலும் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் சன்னதியில் உள்ள வெள்ளி திருவாச்சிகளையும் புதுப்பிக்க உள்ளனர். மொத்தத்தில் அமைச்சருக்காக கோயிலில் புதுப்பித்தல் மற்றும் பிற பணிகள் விறுவிறுப்புடன் நடக்கிறது.