பதிவு செய்த நாள்
24
அக்
2022
06:10
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சரிவர பராமரிக்காததால், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதிக்குள் மழைநீர் அருவியாக கொட்டியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம், 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 63க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகளும், ஆயிரங்கால் மண்டபம், சுவாமி திருக்கல்யாண மண்டபம் என பல்வேறு கட்டடங்களும் உள்ளன. இங்கு பறவைகள், குரங்குகள் அதிகம் தங்கியுள்ளன. இவற்றின் எச்சம், கோவில் வளாகத்திலுள்ள மர இலைகள் உதிர்ந்து, மட்கி கோவில் வளாகத்தை குப்பையாக்குகிறது. இதை கோவில் நிர்வாகம், உழவாரப்பணியில் ஈடுபடும் சிவபக்தர்கள் துாய்மை படுத்துகின்றனர். ஆனால், கோவிலின் மேல் தளத்தை சுத்தப்படுத்தாதால், மழை நீர் வடிகுழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு முன் கனமழையின்போது, இரண்டாம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதியில் மழைநீர் அருவியாக கொட்டியது. கோவில் ஊழியர்கள் மழைநீர் வெளியேறும் பைப்லைனில் குப்பையை அகற்றி சரி செய்தனர். அதை சிலர் மொபைலில் வீடியேோ எடுத்து வைரலாக்கினர். கோவில் வளாகத்தில் அனைத்து மேல்தளங்களை சுத்தம் செய்ய, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.