பதிவு செய்த நாள்
17
நவ
2022
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 27-ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் டிச., 6-ல் அதிகாலை கோவில் கருவறை முன், 4:00 மணிக்கு பரணி தீபம், அன்று மாலை, 6:00 மணிக்கு கோவிலின் பின்புறம் அமைந்துள்ள, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்படும். கொரோனோ பரவலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடவீதியில் சுவாமி உலா நடக்காமல், கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தது. இதனால், சுவாமி வீதிஉலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் இருந்தன. இந்தாண்டு மாடவீதியில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா நடக்கும், 10 நாட்களும் காலை மற்றும் மாலையில், இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷா மிருகம், தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆயிரங்கால் மண்டபம் அருகே வைத்திருந்த, சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடக்கிறது. ஏழாம் நாள் விழாவில், மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. கோவிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.