பதிவு செய்த நாள்
20
நவ
2022
07:11
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் வருகை, ஆன்லைன் வாயிலாக செய்யப்படும் முன்பதிவால், பக்தர்களின் எண்ணிக்கை முன்கூட்டியே தெரிய வருகிறது. இதையடுத்து, பக்தர்கள் பிரச்னை இல்லாமல் அய்யப்பனை தரிசனம் செய்ய முடிவதால், தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நிம்மதியாக உள்ளனர்.
இது குறித்து சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது: கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை ஆன்லைன் முன்பதிவு இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். மீதமுள்ளவர்கள் புக்கிங் செய்யாமல் வருவர். இதனால் பல நாட்களில் கூட்டம் அலைமோதும். சில நாட்கள் 20 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் நிற்பர்; சில நாட்கள் சன்னிதானம் வெறிச்சோடி காணப்படும். தற்போது அனைத்து பக்தர்களுமே ஆன்லைனில் முன்பதிவு செய்து தான் வர வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த நேரத்தில், எத்தனை பக்தர்கள் வருவர் என்ற விபரம் போலீசுக்கும், தேவசம் போர்டுக்கும் முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதற்கேற்ப தேவசம்போர்டு பிரசாதங்களை தயார் செய்கிறது; தேவைப்படும் அளவுக்கு போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். இதனால், எந்த பதற்றமும் இல்லாமல் அதிகாரிகள் நிம்மதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். நடை திறந்த நவ., 16ல், 18 ஆயிரத்து 777 பேர் தரிசனம் செய்தனர். கார்த்திகை முதல் நாளான நவ., 17ல், 49 ஆயிரத்து 817 பேர் பதிவு செய்திருந்தாலும் 43 ஆயிரத்து 407 பேர் மட்டுமே தரிசனம் செய்தனர். இன்று, 45 ஆயிரத்து 691 பேர்; நாளை 63 ஆயிரத்து 365; நாளை மறுநாள் 47 ஆயிரத்து 98 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.