பதிவு செய்த நாள்
25
நவ
2022
08:11
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன் தினம் நடந்த கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11மணிக்கு காய் கனிகளால் அலங்கரித்திருந்த ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி அம்மனை வரவேற்றனர். தொடர்ந்து பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி, தாலாட்டு பாடல்களை பாடினர். இதில் வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், எஸ்.பி., ஸ்ரீநாதா, சப்கலெக்டர் கட்டா ரவி தேஜா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து மேல்மலையனூரில் மழை கொட்டியது. இதை பொருட்படுத்தாமல் வெளியூரில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தேவை: ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொள்ள சென்னை. வேலூர், சிதம்பரம், கடலூர், சேலம் என வெகு தொலைவில் இருந்து ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வந்திருந்தனர். மழையின் போது இவர்கள் தங்குவதற்கு இங்கு போதிய மண்டபம் இல்லை, இதனால் பக்தர்கள் குழந்தைகளுடன் கடும் அவதிக்குள்ளாகினர். இது போன்ற நாட்களில் பக்தர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு கூடுதல் மண்டபங்களை கட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.