பதிவு செய்த நாள்
27
நவ
2022
07:11
தமிழகத்திற்கும், காசிக்கும் இடையிலான தொன்மையான நாகரிக பிணைப்பை மீட்கும் வகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை, 19ம் தேதி, வாரணாசியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
டிச., 16ம் தேதி வரை ஒரு மாத காலம் நடக்கும் நிகழ்ச்சியை, இந்திய தொழில்நுடப் கல்வி கழகமான சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை இணைந்து நடத்துகிறது.
இதில், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்காக காசிக்கு, 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 2,592 பேர் பயணம் செய்கின்றனர்.
வியப்பில் ஆழ்த்தியது: ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூர் வழியாக வாரணாசி புறப்பட்ட முதல் ரயிலில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்களுடன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பயணித்தார். இதில் நாம் தமிழர் உள்ளிட்ட சில அமைப்பின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களுக்கு, போகும் வழியெங்கும் ஆட்டம், பாட்டத்துடன் வரவேற்பு தரப்பட்டது. குழுவில் பயணித்த இஸ்லாமிய சகோதரர் உட்பட ஒவ்வொருவருக்கும், இட்ராசி, நாக்பூர், பிரயாக்ராஜ் என, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மாலையிட்டு, மலர் துாவி, திலகமிட்டு, அரசியல், ஜாதி, மத, பேதம் கடந்து, ஆத்மார்த்தமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் மற்றும் தங்கிய ஹோட்டல்களில் உணவு உள்ளிட்ட உபசரிப்புகளை, ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் மேற்பார்வையில், வேளை தவறாமல் சிறப்பாக செய்தனர். வாரணாசியை ரயில் அடைந்த நேரம் நள்ளிரவு1:00 மணியை தாண்டி இருக்கும். அப்போதும், அந்த ஊர்எம்.எல்.ஏ., - எம்.பி., போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என, பலரும் திரளாக வந்து, மேள தாளத்துடன் மாலையிட்டு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர். சங்கம பங்கேற்பாளர்களை, இது கனவா, நிஜமா என்ற வியப்பில் ஆழ்த்தியது. காசி தமிழ் சங்கமம் முதல் நாளில், மோடி துவக்கி வைத்த நிகழ்வில் மாணவ பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்களுடன், பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழ் பாரம்பரிய கலைகளை வடமாநிலத்தவர் அறியும் வகையில், கலை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து, அனுமன் காட், பாரதியார் வாழ்ந்த இல்லம், காசி விஸ்வநாதர் மற்றும் அன்னபூரணி ஆலயம், ராம்நகர் கோட்டை மியூசியம், ஆசாத் சந்திரசேகர் பூங்கா. சுவாமி நாராயணன் மற்றும் ஹனுமன் கோவில், கங்கா ஆரத்தி, படகு சவாரி, திரிவேணி சங்கமம், அயோத்தி கோவில், சரயு நதி போன்ற இடங்களை எல்லாம், மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதில் செல்லும்இடமெல்லாம் வி.வி.ஐ.பி.,க்களை போல, தமிழக குழுவினருக்கு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கோவிலிலும் வேத மந்திரங்கள் முழங்க கொடுத்த வரவேற்பு குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கட்டுமானப் பணியாளர்கள், போலீசார் மட்டுமே சென்ற அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்திற்கும், மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அமைய உள்ள ராமர் கோவிலின் பிரமாண்ட தோற்றம் குறித்து விளக்கப்பட்டது.
அரசியல் நாடகம்: மாணவர்கள் அனைவரும் விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டரியில் இயங்கும் ஏசி வசதி உள்ள ஐந்து பஸ்களில், முன்னும் பின்னும் சைரன் ஒலிக்கும் போலீஸ் வாகனம் புடை சூழ அழைத்துச் செல்லப்பட்டனர். காசி சுற்றுவட்டார பகுதியில் பொது போக்குவரத்துக்கான வாகனங்களே இல்லாத நிலையில், குழுவினர் பயணித்த பஸ்சை பார்த்து, அவ்வூர் மக்கள் அதிசயித்தனர். சிலர் பஸ்சுடன் செல்பி எடுக்கும் அளவுக்கு இருந்தது. இச்சங்கமம் நிகழ்ச்சியை, தமிழகத்திற்கும் வாரணாசிக்கும் உள்ள நீண்ட காலப் பண்பாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சி என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மத்திய கல்வி நிறுவனங்கள், போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றில் ஹிந்தியை முன்னிறுத்த, தமிழை வைத்து நடத்தப்படும் அரசியல் நாடகம் என, இன்னொரு தரப்பினரும் கூறிய வேளையில், காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்ற மாணவர்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டே இந்நிகழ்ச்சியை பார்த்தனர்.
பிரயாக்ராஜ் ஆனது ஏன்?: தமிழில் உள்ள சங்க இலக்கியம், திருக்குறள் போன்றவற்றை ஹிந்தி மொழியிலும், ஹிந்தியில் உள்ள துளசிராமாயணம் போன்றவற்றை தமிழிலும் மொழி பெயர்த்த தமிழ் கே.துளசி என்றழைக்கப்படும் கோவிந்தராஜன் அளித்த பேட்டி:அலகாபாத் தற்போது பிரயாக்ராஜ் என, மாற்றப்பட்டுள்ளது. பிரம்மா இங்கு வந்து யாகம் செய்தார். பிர என்றால் முதல், யாக் என்றால் யாகம். அதனால் பிரயாக் என்றானது. யாகம் செய்த இடத்தில் அட்சயவடம் என்ற ஆல மரம் உள்ளது. இது ஊழி காலத்தில் கூட அழியாது நிலைபெற்றிருக்கும். மரத்தின் இலையில் விஷ்ணு பகவான் அமர்ந்து, உலகை ரட்சிப்பதாக நம்பிக்கை.மரத்திற்கு அருகில் உள்ள கோட்டை, அக்பர்காலத்தில் 1583ல் கட்டப்பட்டது. முகலாயர் காலத்திற்கு பின், நவாப் என்பவர் ஆங்கிலேயர் வசம் கோட்டையை ஒப்படைத்தார்.ஆங்கிலேயேர் காலத்தில் பிரயாக் என்பது அலகாபாத் ஆனது. அக்பரால் கொடுக்கப்பட்டதால், அல்லா வசிக்கும் இடம் அல்லா கா பாத் என்ற பெயர், அலகாபாத் என்றானது. தற்போது, மோடி ஆட்சியில் பிரயாக் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.தமிழகத்தில் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போல், ஆசாத் சந்திரசேகர் என்ற சுதந்திர போராட்ட வீரர், ஆங்கிலேயர் ஒருவரை சுட்டு விட்டு தப்பியோடும்போது, ஆங்கிலேயரிடம் சிக்காமல் இருக்க, தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இடம் தான் இந்த ஆசாத் சந்திரசேகர் பூங்கா.இவ்வாறு அவர் கூறினார்.
கண்ணீர் மல்க பிரார்த்தனை: படகில் பயணித்த படியே கங்கா ஆரத்தியை காணும் பாக்கியம் பெற்ற தமிழக குழுவினர், தாங்கள் தரிசித்ததை வீடியோ அழைப்பு வாயிலாக, குடும்பத்தினருக்கும் காட்ட, அவர்கள் கண்ணீர் மல்க வேண்டியுருகினர். மாணவர் ஒருவரின் பாட்டி கூறுகையில், இவ்வளவு வயதை கடந்த பின்னும் எனக்கு கிடைக்காத பாக்கியம் உனக்கு கிடைத்துள்ளது; உன் வாயிலாக நானும் பெற்றேன் என்றார்.
மாசு இல்லாத காசி: காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி நகர வீதிகளில் உள்ள தேநீர் கடைகளில் பிளாஸ்டிக், கண்ணாடி டம்ளர்களுக்கு பதிலாக, மண் குடுவையை மட்டுமே பார்க்க முடிந்தது. அதேபோல் பெட்ரோல் ஆட்டோக்களுக்கு பதில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களே இருந்தன. பெரும்பாலானோர் சைக்கிளை அதிகம் பயன்படுத்தினர். ஒட்டுமொத்தமாக மாசில்லாத காசியை தமிழக குழுவினர் வெகுவாகவே நேசிக்க முடிந்தது. கங்கை படகு சவாரி மற்றும் படித்துறைகளை பார்வையிட, ஹிந்துக்கள், வெளிநாட்டினர் மட்டுமின்றி, இஸ்லாமியர்களும் ஆர்வமுடன் வந்து சென்றதை காண முடிந்தது.
பஜனைப் பிரியர்கள்: ரயிலில் பயணித்தபோது, மாணவர்களில் பலர் பஜனை பாடல் பாடுவதில் ஆர்வமாக இருந்தனர். அதிலும் தேசபக்தி மற்றும் இறைபக்தி பாடல்களை குழுவாக சேர்ந்து பாடினர். இவர்களுடன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சேர்ந்து பாடலை ரசித்தார். அயோத்திக்கு சென்றபோது, அங்கு புதிதாக கட்டப்படும் ரயில் நிலையம், விமான நிலையத்தை போன்று பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. நாட்டிய மங்கையர் நடனமாடி, தமிழக குழுவினரை வரவேற்றனர். விஜய் வீர் விக்ரம் பகதுார் சிங் யாதவின் அவாதி நடன குழுவினரின் பாரம்பரிய நடனத்தை, தமிழக குழுவினர் எழுந்து நின்று கைதட்டி ரசித்தனர்.
மணல் சிற்பம்: திரிவேணி சங்கமத்தில் காசி தமிழ்ச் சங்கமத்தின் லோகோவை மணல் சிற்பமாக வடிவமைத்திருந்தனர். அதனருகே உள்ள அனுமன் கோவில் நடை, தமிழக குழுவினருக்காகவே மதியம் சில நிமிடம் தாமதமாக அடைக்கப்பட்டது. படுத்த நிலையில் உள்ள அனுமன் வரலாற்றை, சுவாமி பல்வீர் கிரி எடுத்துரைத்தார்.@@block@@
-- -சந்தியா, கல்லுாரி மாணவி
-- வினோத்குமார்,
திருச்சி கல்லுாரி மாணவர்
-- யுவராஜன்,
விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமம்
கிழக்கும் மேற்கும் சங்கமிக்க வேண்டும்: ஞ்சை, சாஸ்த்ரா பல்கலையில் இறுதியாண்டு சட்டப்படிப்பு பயிலும் நான், கல்லுாரி இணையதளத்தில் பதிவு செய்து இங்கு வந்தேன். உ.பி.,க்கு வரும் வரை பெரிய அளவில் எதிர்பார்த்து வரவில்லை. கேள்விப்பட்ட கதைகளை மட்டுமே சுமந்து வந்தேன். ஆனால், அதை தவிர்த்து விட்டே இங்கு வந்திருக்கலாம். இங்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. நிறைய புது விஷயங்களை அறிந்து கொண்டேன். முக்கியமாக வட இந்தியா - தென் இந்தியா என்றில்லாமல், ஒன்றாக பார்க்கும்போது அழகாக உள்ளது. மொழி தான் வெவ்வேறு தவிர, அதன் பின்னால் உள்ள கலாசாரம், உணர்வு, சம்பிரதாய முறைகள் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளன. வடமாநிலத்தவர்கள் நம் மேல் அன்பாக உள்ளனர். இப்பயணத்தை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டியதில்லை. ஆன்மிக, கல்வி சார்ந்த பயணமாகவே நான் பார்த்தேன். கலாசார ரீதியாக நாம் எப்படி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கிறோம் என்பதே, இப்பயணத்தின் நோக்கமாக எனக்கு தெரிந்தது.அடுத்தகட்டமாக காசி - தமிழகம் என்பதோடு மட்டுமின்றி, கிழக்கும் - மேற்கும் சங்கமிக்க வேண்டும். ஆண்டுதோறும் இது தொடர வேண்டும். நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். வடமாநிலத்தவரும் தமிழகம் வர வேண்டும்.எனக்கு கிடைத்த வரவேற்பை காணும்போது, நிஜமா, கனவா என்றே நினைக்க தோன்றியது. நம்மையும் இப்படியெல்லாம் மதிப்பரா என வியந்தேன்.காசி பயணம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. வரவேற்பும், தரிசனமும் அற்புதமாக இருந்தது. நம்மூர் சிற்பக் கலைகளுடன் ஒப்பிடும்போது, இங்கே உள்ள சிற்பங்கள் வித்தியாசமாக இருந்தன. கோவில் வடிவமைப்பும் மாறுபட்டிருந்தது. இதன் வாயிலாக, இந்தியாவின் கலாச்சாரத்தை அறிய முடிந்தது.
-- தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர்
- நமது நிருபர் -