சபரிமலை ரோப் கார் திட்டம் இழுபறி: வனத்துறை எதிர்ப்பால் திணறல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2022 08:12
சபரிமலை:வனத்துறையின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் சபரிமலை ரோப் கார் திட்டம் இழுபறியில் உள்ளது. டிராக்டர்கள் இயக்கப்படுவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
சபரிமலைக்கு தேவையான பொருட்களை முன்னோர் கழுதை சுமையாக, பின் மனித தலைசுமையாக கொண்டு சென்றனர். கழுதைகளின் கழிவுகளால் சபரிமலை அசுத்தமானது. இதையடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிராக்டரில் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. சபரிமலை சீசன் காலத்தில் பக்தர்களின் கூட்டத்துக்கு மத்தியில் டிராக்டர்கள் இயக்கப்படுவது பல சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க 2015ல் பம்பை- சன்னிதானம் இடையே ரோப்கார் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 2019ல் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினர் கடும் எதிர்ப்பால் சர்வே பணியுடன் திட்டம் நிற்கிறது, தேவசம் போர்டுக்கு அப்பம், அரவணை தயாரிப்புக்கு மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் கிலோ சர்க்கரை, ஏழு லட்சம் கிலோ அரிசி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கட்டுமான பொருட்கள், வியாபார ஸ்தாபனங்களுக்கான பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்காகதான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. 2.98 கி.மீ., துாரத்தில் 12 மீ., அகலத்தில் பாதை ஏற்படுத்தி ஏழு துாண்கள் அமைக்க வேண்டும். பம்பை ஹில்டாப்பில் துவங்கி சன்னிதானத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டடத்தின் அருகில் நிறைவு பெறும். பெரும்பாலும் இந்த இடங்கள் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் வருகிறது. இதற்காக 1300 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். பெரியாறு வனவிலங்குகள் சரணாலயத்தில் இப்பகுதிகள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பெருமழையில் பம்பை ஹில்டாப்பில்மண்சரிவு ஏற்பட்டதால் இங்கு திட்டம் தொடங்குவது பாதுகாப்பானதல்ல என்றும் வனத்துறை கூறுகிறது. வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையை குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்து புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சபரிமலையில் ரோப்கார் திட்டம் சாத்தியமாகும் என பக்தர்கள் தெரிவித்தனர்.