பதிவு செய்த நாள்
03
டிச
2022
09:12
மதுரை :திருச்செந்துார் முருகன் கோவிலில், மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கவும், பக்தர்கள் கலாசார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்தவும், அறநிலையத் துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி, அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கோவில்களின் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களால், புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிலைகள் திருடு போன சம்பவங்களும் நடந்துள்ளன.திருச்செந்துார் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக, மொபைல் போன்களை பயன்படுத்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, அங்குள்ள சிலைகள் முன் நின்று, செல்பி எடுப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனவே, திருச்செந்துார் கோவிலின் உள்ளே மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்துார் கோவிலில் மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க, கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருச்செந்துார் கோவில் இணை கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கை: நவ., 14 முதல், கோவில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோவிலுக்குள், 15 இடங்களுக்கு மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவில் வளாகத்தில் மொபைல் போன்களை பாதுகாத்து, டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தடையை மீறி கொண்டு செல்வது தெரிந்தால், போன் பறிமுதல் செய்யப்படும். கோவிலுக்குள் வரும் பக்தர்கள் மரபை காக்கும் வகையில் உடை அணிந்து வர வேண்டும் என, விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.பாதுகாவலர் நியமனம் செய்யவும், துாத்துக்குடி எஸ்.பி.,க்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவில்களின் புனிதம், துாய்மையை காக்கும் வகையில், அனைத்து கோவில்களிலும் மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடை விதிப்பது, பக்தர்கள் கலாசார உடையணிந்து வருவதை உறுதிப்படுத்தும் உத்தரவை, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது திருச்செந்துார் முருகன் கோவிலில் உள்ள மொபைல் போன் தடை உத்தரவு, அனைத்து கோவில்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது.