பத்ரகாளியம்மன் சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 04:12
அவிநாசி: அவிநாசி அடுத்த சேவூரில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சேவூரில் எழுந்தருளியுள்ள அழகு நாச்சியம்மன் (எ) பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒட்டகம், குதிரை, ஜண்டை மேளத்துடன் தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். அதனைத் தொடர்ந்து திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாசர் தலைமையில் கோவில் திருப்பணி கமிட்டியின் கௌரவ தலைவர் தேவராஜ், வேலுச்சாமி, திருமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலையில் பத்திரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோபுர விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மாலை பத்ரகாளியம்மன் திருவீதி உலா நடைப்பெற்றது.