பதிவு செய்த நாள்
10
டிச
2022
09:12
சபரிமலை: சபரிமலையில் நேற்று திரண்ட பக்தர் கூட்டத்தால் ஆன்லைன் பதிவுக்கும், தரிசன நேரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலை ஏற்பட்டது. 9 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் படியேறினர்.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டலகால சீசன் துவங்கிய பின், நேற்று அதிக பட்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். கூட்டம் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்த போலீசார் மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வழியாக பக்தர்களை திருப்பி விட்டனர். சந்திராங்கதன் ரோட்டில் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சரங்குத்தி வழியாக பக்தர்கள் திருப்பி விடப்பட்டதால் பக்தர்களின் காத்திருப்பு நேரமும் அதிகமானது. நேற்று காலை 6:00 மணிக்கு பம்பையில் இருந்து மலையேறிய பக்தர்கள், மதியம் 3:00 மணிக்குதான், 18 படிகளுக்கு பக்கத்தில் வர முடிந்தது. ஆனால் அவர்களின் தரிசன நேரம் காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி எல்லா சிலாட்களுமே தாறுமாறாயின. 9 முதல் 10 மணி நேரம் வரை தாமதமாக தரிசனம் செய்ய வேண்டியிருந்தது. வரிசையில் காத்து நின்ற முதியவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டனர். பெரிய நடைப்பந்தலில் பிஸ்கட், மூலிகை குடிநீர் வழங்கப்பட்டாலும், அது அனைவருக்கும் கிடைக்கவில்லை. கூட்டத்தால் நேற்று மதியம் நடை அடைப்பது பகல் 1:00 மணிக்கு பதிலாக 1:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
மதியம் நடை அடைக்கப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18 படிகளில் ஏறி வடக்கு வாசல் வழியாக தரிசனம் நடத்தினர். கூட்டம் நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்தது. ஒரே நாளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் ஆன்லைன் முன்பதிவு பற்றியும் பக்தர்கள் விமர்சனம் செய்தனர். குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் நடத்த முடியுமோ அந்த அளவை தாண்டி அதிகம் பக்தர்களை முன்பதிவு செய்ய வைத்தது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மனைவி, மகன், தி.மு.க., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ் நேற்று முன்தினம் இரவு சபரிமலை வந்து நேற்று காலை நிர்மால்ய தரிசனத்துக்கு பின் புறப்பட்டனர்.