சபரிமலையில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் போலீசார் காயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2022 12:12
சபரிமலை: சபரிமலை பாதையில் நேற்று மாலை ஏற்பட்ட நெரிசலில் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், போலீசார் காயமடைந்தனர்.
சபரிமலையில் இந்த சீசனில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் எவ்வளவு பேரை அனுமதிக்கலாம் என்ற கணக்கு இல்லாமல் அளவுக்கு அதிகமான பக்தர்களுக்கு முன்பதிவு வசதி கொடுக்கப்பட்டது. நேற்றும், நேற்று முன்தினமும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் பத்து மணி நேரம் வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கும், தரிசன நேரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணியளவில் நீலிமலை பாதையும், டிராக்டர் ரோடும் இணையும் இடமான மரக்கூட்டத்தில் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்தது. இந்த நேரத்தில் சன்னிதானத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவருடன் பம்பைக்கு வந்து கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்த போலீஸ் முயற்சித்த போது நெரிசல் ஏற்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதை தொடர்ந்து மத்திய அதிவிரைவுப்படையினர் மரக்கூட்டம் சென்று நிலைமையை சரி செய்தனர்.