பதிவு செய்த நாள்
31
ஆக
2012
12:08
கடவுள் ஒருவர் என்றாலும், அவரவர் மனவிருப்பத்திற்கு ஏற்ப உருவம் கொடுத்து, பல பெயர்களால் குறிப்பிடுகிறோம். சில தெய்வங்களுக்கு ஒரு முகம், சிலருக்கு இரண்டு, மூன்று என பல முகங்கள், பல கைகள் என அமைத்து வழிபடுகிறோம். ஆனால், எந்த தெய்வமாக இருந்தாலும் திருவடி என்னும் பாதங்கள் இரண்டு மட்டுமே தரையில் ஊன்றியிருக்கும். தன்னை நாடி வரும் பக்தர்கள் இருகைகளால் பிடித்துக் கொள்ள ஏதுவாக இறைவனுக்கு இரு பாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த திருவடிகள் பக்தர்களுக்கு பரஞானம், அபரஞானம் என்னும் இருவித ஞானங்களை தருகின்றன. இதில் அபரஞானம் என்பது உலகவாழ்வுக்குத் தேவையான செல்வம் உள்ளிட்ட வசதிகள், இன்பங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிகள். இவற்றால் நிம்மதி கிடைக்கிறதா என்றால் இல்லை. எனவே, பரஞானத்தை ஒரு திருவடி தருகிறது. பரஞானம் என்றால் ஆன்மிக முன்னேற்றம். நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வடிகாலாகத் திகழ்வது இறைவழிபாடே. கோடிப்பணம் இருந்தாலும் இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட்டால் உடம்பு தாங்கமாட்டேன் என்கிறது, சர்க்கரை வந்து முட்டுகிறது. நோய்களால் அவதி, பணத்தைக் கறக்க பிள்ளைகள், உறவுகள் வந்து மோதி மனநிம்மதி இழப்பு...அட பணமே! நீயும் வேண்டாம், உன் சகவாசமும் வேண்டாம்... நான் ஆண்டவனிடம் போகிறேன், என்று சொத்துக்களை விட்டுவிட்டு, கோயிலுக்கு போய் காவியணிந்து அமர்ந்து விட்டால் நிம்மதி கிடைக்கிறது. எனவே, தான் நமது மகான்கள் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே என பகவானின் பாதங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டனர்.