சங்க இலக்கியத்தில் மடலேறுதல் என்ற வகையுண்டு. காதலித்தவளை அடைய முடியாத காதலன், தன் மனநிலையை ஊரறியச் செய்ய, காதலியின் உருவம் வரைந்த கொடியை கையில் தாங்கியபடி ஊரை வலம் வருவான். இவள் தான் என்னைக் கைவிட்ட இரக்கமற்றவள் என்று கண்ணீர் சிந்துவான். இதுபோல, திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகவும்,திருமாலைத் தன் காதலனாகவும் கருதி, சிறிய திருமடல், பெரியதிருமடல் எனும் இருமடல்களை எழுதியுள்ளார். இருந்தாலும், இப்பாடல்களில் திருநறையூர் என்னும் நாச்சியார்கோவிலில் வீற்றிருக்கும் நறையூர் நம்பியைப் பற்றியே பாடப்பட்டதாகக் கூறுவர்.