சபரிமலை தரிசனம்: டிச.16,19க்கு ஆன்லைன் முன்பதிவு முடிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2022 01:12
சபரிமலை: சபரிமலை தரினசத்துக்கான முன்பதிவு நாளையும், டிச.,19க்கும் முடிந்தது. கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் இன்று பம்பையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சபரிமலை தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நவ., ஒன்றாம் தேதி தொடங்கியது. அன்று முதல் மண்டல - மகரவிளக்கு காலத்தில் 62 நாட்களிலும் முன்பதிவுக்கு இடம் இருந்தது. சில நாட்களில் முன்பதிவு லட்சத்தை கடந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தினசரி முன்பதிவு எண்ணிக்கையை 90 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அதிக முன்பதிவு இருந்த டிச.,16, 19 தேதிகளில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்களிலும் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நாட்களில் ஸ்பாட் புக்கிங்கும் கிடைக்காது. கடந்த இரண்டு நாட்களாக இலவுங்கல், நிலக்கல், அட்டத்தோடு போன்ற இடங்களில் பக்தர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பல மணி நேர இடைவெளியில் அனுப்பப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு பின்னர் இது படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது. நேற்று இரவு வரை வாகனங்கள் எந்த தடையும் இல்லாமல் பம்பை வந்து சென்றன. ஆனால் 16, 19 தேதிகளில் வாகன கட்டுப்பாடு இருக்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் இன்று பம்பை வருகிறார். 10:30 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் பிரமோத் நாராயணன், பத்தணந்திட்டை கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் மற்றும் அனைத்து துறைஅதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷூம் இன்று பம்பை வந்து ஆய்வு செய்கிறார். தொடர் மழைக்கு பின்னர் நேற்று முன்தினமும், நேற்று மதியம் வரையிலும் நல்ல வெயில் அடித்த. மாலையில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியது.