பதிவு செய்த நாள்
17
டிச
2022
09:12
சபரிமலை : சபரிமலையில் ஒரு நிமிடத்தில் 80 பேர் படியேறி, ஒவ்வொருவரும் மூன்று வினாடிகள் அய்யப்பனை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என, பத்தணந்திட்டை கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கி 30 நாட்கள் கடந்துள்ள நிலையில், அய்யப்பனை 20 லட்சம் பக்தர்கள் வணங்கிச் சென்றுள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக பெருமழை, கொரோனா பரவல் ஆகியவற்றால் இப்பயணம் முடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வரு கின்றனர். தரமான ரோடுகள், 1855 குடிநீர் இணைப்புகள், 2,406 கழிவறைகள், 34 ஆயிரத்து 100 தங்குமிடங்கள், 2,000க்கும் அதிகமான பறக்கும் படையினர், நிலக்கல் - பம்பை தடத்தில் 200 பஸ்கள் நடத்திய 39 ஆயிரம் சர்வீஸ்கள், துப்புரவு பணிக்கு 1,000 பேர் என அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செயல்படுகின்றன. தினமும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 18 ஆயிரம் பேர் உழைக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் மிக அதிகமானால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, தினசரி தரிசன எண்ணிக்கையை 90 ஆயிரமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குறைத்துள்ளார். தரிசன நேரம் 19 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 18 படிகளில் ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறி, திருமுற்றத்தில் நான்கு வரிசைகளில் சென்று, மூன்று வினாடிகள் அய்யப்பனை வணங்கி சென்றால் ஒரு நாளில் 91 ஆயிரத்து 200 பேர் தரிசனம் செய்ய முடியும். இதுதான் தற்போது அமல்படுத்தப் பட்டுள் ளது. மொத்தத்தில் உலகத்தில் ஒரு முன்மாதிரி திருவிழாவாக மண்டல காலத்தை மாற்ற, தொடர்ந்து அனைவரும் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.