பதிவு செய்த நாள்
01
ஜன
2023
01:01
இந்தியாவில் 2023 புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடெங்கிலும் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள், இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், வாணவேடிக்கைகளுடனும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்தியாவின் மும்பை, டில்லி, கோல்கட்டா சென்னை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டு பிறந்ததையொட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
இந்து கோவில்களில் சிறப்பு பூஜைகளும், கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழகத்திலும் புத்தாண்டை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டு உற்சாகம் நேற்று (டிச.,31) இரவு 10 மணியிலிருந்தே களை கட்ட தொடங்கியது. ஆடிப்பாடியும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தும் அனைவரும் புத்தாண்டினை வரவேற்றனர்.
தலைவர்கள் வாழ்த்து: 2023 பிறந்ததையொட்டி பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக கவர்னர் ரவி உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.
போலீசார் அறிவுறுத்தல்: 2023 புத்தாண்டினை பாதுகாப்பாக கொண்டாடுமாறு பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்து: தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை தினமலர்டாட் காம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது