சீர்காழி பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 11:01
சீர்காழியில் இன்று அதிகாலை திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற தாடாளன் பெருமாள் என்றழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 28 வது தலமாக திகழ்ந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 5:30 மணிக்கு ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் கோவில் பிரகாரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சொர்க்க வாசல் என்று அழைக்கப்படும் பரமப வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்ட படி பெருமாளை சேவித்தனர். தொடர்ந்து பெருமாள் வீதி உலாவாக வந்து கோவிலில் எழுந்துள்ளார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காண கிடைக்கும் பெருமாளின் வலது திருவடி சேவையை கண்டு தரிசனம் செய்தனர் மாலை நம்மாழ்வாரின் திருவாய்மொழி முதற் பற்று சேவை மற்றும் சாற்று முறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பத்ரி பட்டாச்சாரியார் செய்திருந்தார். சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுபோல மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளா ரங்கநாதர் கோவில், திருநாங்கூர் திவ்ய தேசங்கள், அண்ணன் கோவில், தேரிழந்தூர் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருள பக்தர்கள் தரிசனம் செய்தனர்.