பதிவு செய்த நாள்
13
ஜன
2023
08:01
கோபி: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில், 15 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிச.,29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு நெருப்பு மூட்டினர். வீரமக்கள் அடங்கிய குழுவினர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குண்டத்தை தயார் செய்தனர்.
தீ மிதிக்கும் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆதிநாராயண பெருமாள் கோவில் வரை விடியவிடிய வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை, 5:10 மணிக்கு, அம்மன் சிம்ம வாகனத்தில் குண்டத்தின் முன் எழுந்தருளினார். காலை, 5:30 மணிக்கு திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி ஆனந்தன் குண்டத்துக்கு முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பூக்களை அள்ளி வீசினார். அதை அங்கு கூடியிருந்த பக்தர்கள் பிடித்தனர். குண்டத்தில் இருந்த நெருப்பை, இரு கைகளால் அள்ளி வீசி, 5:50 மணிக்கு, குண்டம் இறங்கி விழாவை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து, வீரமக்கள், முக்கியஸ்தர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள், பக்தர்கள் என வரிசையாக குண்டம் இறங்கினர். காலை, 10:00 மணி வரை தொடர்ந்த நிகழ்வில், 15 ஆயிரம் பேர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குளிரால் வருகை சரிவு?: ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, பாரியூர் குண்டம் நிகழ்வில், சராசரியாக, 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் தீ மிதித்துள்ளனர். நேற்று, 15 ஆயிரம் பேர் மட்டுமே குண்டம் இறங்கினர். வழக்கத்தை விட கடும் குளிர் நிலவியதால், பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.