பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா : பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2023 03:01
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் ரத சப்தமி விழா நடந்தது. நாள் முழுவதும் வீதி வலம் வந்த பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.
சூரிய ஜெயந்தி நாள் ரத சப்தமி விழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் சூரியனுக்கு உரியதாகும். தை மாதத்தில் வரும் சப்தமி திதி ரத சப்தமி நாளாகும். சூரியனின் ரதத்தில் பூட்டிய ஜய, அஜய, விஜய, ஜிதப்ராண, ஜிதஸ்ம, மனோஜவ, ஜிதக்ரோத என்ற ஏழு குதிரைகளும், சூரிய கதிர்கள் பாயும் பாதையை குறிப்பதாகும். ரத சப்தமி நாள் துவங்கி, சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாதத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். அந்த வகையில் இன்று காலை 7:00 மணிக்கு எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அமர்ந்த திருக்கோலத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் நாள் முழுவதும் முக்கிய வீதிகளை வலம் வந்த பெருமாள் கோயிலை அடைந்தார். பக்தர்கள் தேங்காய் உடைத்து பிரசாதங்கள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர். இரவு சிறப்பு தீபாராதனைகளுக்கு பின், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் ஏகாந்த சேவையில் கோயில் முன்பு உள்ள கல்மண்டபத்தில் காலை 10:00 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள் புறப்படாகி முக்கிய வீதிகளில் வலம் கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.