பதிவு செய்த நாள்
10
பிப்
2023
11:02
சென்னை: தஞ்சாவூரில் செயல்படும் மத்திய அரசின் கலாசார அமைப்பான தென்னக பண்பாட்டு மையம், சிவராத்திரி அன்று கலை விழாக்களை நடத்த உள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள கலைகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசால், தஞ்சாவூரில், தென்னக பண்பாட்டு மையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு சார்பில், இந்தாண்டு சிவராத்திரியன்று, தஞ்சையைச் சுற்றியுள்ள சிவாலயங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை பெரிய கோவிலில், வரும் 18ம் தேதி முதல், 22ம் தேதி வரை பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி, குச்சிப்புடி உள்ளிட்ட தென்மாநில பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மயிலாடுதுறை மயூரநாதர், திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், கலைஞர்களை ஏற்பாடு செய்து, கோவில் நிர்வாகத்துடன் இணைந்து, கலை நிகழ்ச்சிகள் நடத்த, அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.