பதிவு செய்த நாள்
11
பிப்
2023
08:02
சேலம்: வலசையூரில், 70 டன் நந்தீஸ்வரருக்கு நாளை பிரதிஷ்டை விழா நடக்க உள்ளது. சேலம், வீராணம் அருகே வலசையூர் ஆத்மகிரி மலைச்சாரல் பகுதியில் உள்ள ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா நந்தீஸ்வரர் சிலை பிரதிஷ்டை விழா நாளை நடக்க உள்ளது. அதையொட்டி இன்று காலை கணபதி ஹோமம், மதியம், 3:00 மணிக்கு வாஸ்து ஹோமம், 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 7:00 மணிக்கு முதல் கால ஹோமம் நடக்கிறது. நாளை காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், 7:30 மணிக்கு மகா நந்தீஸ்வரர் அஷ்டபந்தனம், 10:00 மணிக்கு அலங்கார பூஜை, மதியம் அன்னதானம் நடக்க உள்ளது.
இதுகுறித்து, கோவிலின் ஆத்மமுத்ரா அறக்கட்டளை குழு உறுப்பினர் சதாசிவம் கூறியதாவது: ஒரே கல்லில் நந்தீஸ்வரர் சிலை செய்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் கல் தேர்வு செய்து எருமாபாளையம் கொண்டு வரப்பட்டது. அங்கு, 3 ஆண்டாக சிலை செய்யும் பணி நடந்தது. 10 அடி உயரம், 14 அடி நீளம், 70 டன் எடையில், 53 லட்சம் ரூபாய் மதிப்பில் சிலை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்ய, சிலை எடுத்துச்செல்லும் பணி இன்று(நேற்று) நடந்தது. இதையொட்டி சிலைக்கு வேத மந்திரம் முழங்க அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ‘டாரஸ்’ வண்டியில் சிலை ஏற்றப்பட்டு, வலசையூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.