பதிவு செய்த நாள்
11
பிப்
2023
03:02
சாத்துார்: விருது நகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று தை மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை , ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகள் திருவிழா நடைபெறும்..நேற்று தை மாதம் கடைசி வெள்ளி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், லாரி, வேன், பஸ், களில் வந்திருந்தனர். அம்மனுக்கு அதிகாலை முதல் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மற்றும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், காது குத்தியும், மாவிளக்கு, கயிறு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், அங்கபிரதட்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை ,சிவகாசி பகுதிகளில் இருந்து சிறப்பு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்து சமய அறநிலையத் துறை கோயில் உதவி ஆணையர் கருணாகரன், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி மற்றும் பூஜாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.