பதிவு செய்த நாள்
15
பிப்
2023
09:02
சென்னை : தமிழகத்தில் உள்ள, 330 சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன, என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கடந்த ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மஹா சிவராத்திரி பெருவிழா, பக்தர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், தஞ்சை பிரகதீஸ்வரர், பேரூர் பட்டீஸ்வரர், நெல்லை நெல்லையப்பர் ஆகிய ஐந்து கோவில்களில் மஹா சிவராத்திரி விழா, வெகு விமரிசையாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள, 330 சிவாலயங்களிலும், 18ம் தேதி மாலை முதல், 19ம் தேதி காலை வரை, மஹா சிவராத்திரி திருவிழா, சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவில் கோபுரங்களில் மின் அலங்காரம், பக்தர்கள் தரிசன வரிசை தடுப்பு வசதிகள், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை, சுகாதார, குடிநீர் வசதி; தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம், பக்தர்களின் வாகனங்களை நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மஹா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவு, தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், வில்லிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை இரவு முழுதும், பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில், உரிய ஏற்பாடுகளை நடந்து வருகிறது. அந்தந்த கோவிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களை வைத்தும், மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.