பதிவு செய்த நாள்
16
பிப்
2023
07:02
கொடைக்கானல், அரோகரா கோஷத்துடன் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் நடந்தது.
பழநி மலை முருகன் கோயிலின் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேர் திருவிழா பிப். 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அன்னம், மயில், காளை, ஆட்டுக்கிடா, பூதம், சிங்கம், யானை வாகனத்துடன் சுவாமி 8 நாட்கள் திருவிழா ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து திருத்தோரோட்ட நிகழ்ச்சி நேற்று காலை துவங்கி பக்தர்கள் பறவை காவடி, கோயில் தீர்த்தங்கள் எடுத்து நேர்த்திக் கடன் செய்தனர். தமிழகத்திலேயே இரு வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் பூம்பாறையில் மட்டுமே நடப்பது சிறப்பானதாகும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேரின் முன் பகுதியில் ஆயிரக்கணகானவர்கள் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். பழநிமலை முருகன் கோயில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், துணை ஆணையர் லட்சுமி, ஆர்.டி.ஓ., ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ, வேணுகோபாலு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.