பதிவு செய்த நாள்
16
பிப்
2023
08:02
சென்னை :அனைத்து சிவன் கோவில்களிலும், மகா சிவராத்திரியையொட்டி, பாரம்பரிய கலை, கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த, கோவில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் தெரிவித்து உள்ளார்.
மண்டல இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: துறை ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து சிவன் கோவில்களிலும், வரும், 18ம் தேதி மாலை முதல், 19ம் தேதி காலை வரை, மகா சிவராத்திரி திருவிழா நடக்க உள்ளது. அதையொட்டி, பக்தர்களின் மனம் மகிழும்படி, நம் பாரம்பரிய கலை, கலாசார மற்றும் ஆன்மிக, சமய நிகழ்ச்சிகளை நடத்த, கோவில் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் கோபுரங்கள், சுவர்கள் போன்றவற்றில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மின் அலங்காரம் செய்ய வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், உரிய வரிசை தடுப்பு வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிப்பறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தீயணைப்பு வாகன நிறுத்தம் போன்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, அவர்கள் ஒத்துழைப்புடன், மகா சிவராத்திரி திருவிழாவை நடத்த வேண்டும். மங்கல இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவு, தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரதநாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசைப் பாடல்கள் போன்றவற்றை, குறிப்பிட்ட கால இடைவெளியில், மகா சிவராத்திரி முழுதும் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிகழ்ச்சிகளை, அந்தந்த கோவில் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களை வைத்தும், சிறப்பாக நடத்த வேண்டும். கலை நிகழ்ச்சிகளுக்கு, கலைஞர்களை தேர்வு செய்யும்போது, அந்தந்தப் பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும். கொரோனா தொற்று குறித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி செயல்பட வேண்டும். நிகழ்ச்சிகளை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்த வேண்டும். இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை நிறுத்த, தனியே இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதுகுறித்து, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.