பதிவு செய்த நாள்
17
பிப்
2023
06:02
தொண்டாமுத்தூர்: மகாசிவராத்திரி விழாவையொட்டி, பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் மலை ஏற குவிந்து வருகின்றனர்.
கோவையின் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக, தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை தொடரில், ஏழாவது மலை உச்சியில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை, பக்தர்களை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். இந்தாண்டு, மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். முதல் நாளான நேற்று சுமார், 10 ஆயிரம் பக்தர்கள், ஈசனை தரிசிக்க மலை ஏறினர். மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து, மலைக்கு செல்லும் படிக்கட்டின் அடிவாரத்தில், வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து, பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து, அதன்பின்னர், பக்தர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர். மலையேறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை, வனப்பகுதியில் வீசுவதை தடுக்க, இந்தாண்டு, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை கொண்டு செல்லும் பக்தர்களிடம் வனத்துறையினர், 20 ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு, அந்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில், ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்தனர். மலை ஏறி விட்டு கீழே இறங்கும்போது பக்தர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை வனத்துறையினரிடம் கொடுத்து, தாங்கள் செலுத்திய, 20 ரூபாய் முன்பணத்தை பெற்று கொள்ளலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
நாளை மகா சிவராத்திரி விழாவையொட்டி, பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம், வனத்துறையினர், போலீசார் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.