நாடு முழுவதும் சிவராத்திரி விழா: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2023 09:02
சென்னை: நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் இன்று(பிப்.,18) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இன்று மஹா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் சிவாலயங்களிலும் விழா நடக்கிறது. கோவை ஈசாமையத்தில் நடக்கும் ஈசனுடன் ஓர் இரவு தினமலர் இணையதள டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பலன்கள்: ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர். சிவராத்திரி தினத்துக்கு முதல் நாளோ அல்லது அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்போ நாம் நம்மை மனதளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மகா சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணம் கூறுகிறது.
ஈஷா மையம்: கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இந்த விழா மாலை 6 மணி முதல் விடிய, விடிய தினமலர் இணையதள டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கீழ்காணும் முகவரியில் மாலை 6 மணி முதல் காணலாம். https://www.dinamalar.com/maha-shivratri-2023/?utm_source=web
சதுரகிரி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (பிப்.,18) முதல் வரும் பிப் 21ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் மக்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமநாத சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த கோயில்களில் வழக்கத்தை விட மக்கள் அதிகமானோர் வந்துள்ளனர். அக்கினிதீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி பல்வேறு சிவன் கோயில்களில் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன. மக்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
வெளி மாநிலங்களிலும் மகா சிவராத்திரி விழா கோலாகலம்:
31 லட்ச ருத்ராட்சத்தில் சிவன் சிலை: குஜராத் மாநிலம் தரம்பூரில் சுமார் 31 லட்ச ருத்ராட்சங்களை பயன்படுத்தி சிவன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையானது 31.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‛ ருத்ராட்ச சிவலிங்கம் என இதற்கு பெயரிடப்பட்டிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாதேவ் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பஞ்சாப் மாநிலம்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆண்டு தோறும் மகா சிவாராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டும் சிவன் கோயில்களில் மக்கள் கூட்டம் கடல் போல் காட்சியளித்தது.