போத்தனூர்: போத்தனூர் அடுத்து கணேசபுரம் அருகே சீனிவாச நகரிலுள்ள வரசித்தி வினாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று மாலை திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து முளைப்பாலிகை, தீர்த்தக் கலசங்கள் அழைத்து வருதல், வினாயகருக்கு முதல் கால வேள்வி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், அஷ்டபந்தனம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று அதிகாலை திருமேனிகட்கு ஆனைந்து காட்டி காப்பு அணிவித்தல், திரவியாகுதி, அருட்கலையேற்றுதல், நிறையாகுதி, பேரொளி வழிபாடு நடந்தன. காலை, 9:45 மணிக்கு மேல் விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு மாதேவ் மகா சமஸ்தானம் யுக்தேஸ்வர் சுவாமியால் நடத்தப்பட்டது. இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, வினாயகரை தரிசித்து சென்றனர். மாலை திருவீதி உலா நடந்தது. இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.