பதிவு செய்த நாள்
05
மார்
2023
01:03
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியில், முதலாம் ராஜேந்திர சோழனால் 1020ல், கட்டப்பட்ட, பெரியநாயகி உடனுறை வான சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் மாசி மாத பூச நட்சத்திர திருவிழாவின், இரண்டாம் கால பூஜையின்போது, யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருவார். நடப்பு ஆண்டு மாசி மாத பூச நட்சத்திர திருவிழாவை காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமணா கலைக்கூடத்தினர் யானை வாகனத்தை பழமை மாறாமல் சீரமைத்து, வண்ணம் தீட்டி புதுப்பித்தனர். மாசி மாத பூச நட்சத்திர இரண்டாம் கால பூஜை விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீப ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட யானை வாகனத்தில், பெரிய நாயகி அம்பிகையுடன், எழுந்தருளிய வானசுந்தரேஸ்வரர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். மானாம்பதி வான சுந்தரேஸ்வரர் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான மாசிமக திரு விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி காலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் மூர்த்திகளுக்கு மகா திருமுழுக்கும், காலை, 9:00 மணிக்கு மனோன்மணி அம்மாள் சமேத சந்திரசேகர சுவாமி திருவீதியுலா புறப்பாடு நடக்கிறது. நள்ளிரவு 1:00 மணிக்கு மானாம்பதி கூட்டுச்சாலையில் அமைந்துள்ள திருவிழா மண்டபத்தில் திருமுழுக்கு மற்றும் அலங்காரம் நடக்கிறது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு, மானாம்பதி, பெருநகர், விசூர், தேத்துறை, தண்டரை, சேர்பாக்கம், குறும்பூர், நெடுங்கல், அத்தி, சேத்துப்பட்டு, இளநீர்குன்றம், கீழ்நீர்குன்றம், மானாம்பதி கூட்ரோடு, அகத்தியப்ப நகர், நெடுங்கல் புதுார் ஆகிய 16 கிராம சுவாமிகளுடன் மானாம்பதி கூட்டு சாலையில், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாட்டை அறங்காவலர் குழு, ஆண்டவிநாயகர் கோவில் தெரு, மேட்டுத்தெரு மற்றும் மானாம்பதி கிராம பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.