பதிவு செய்த நாள்
14
செப்
2012
12:09
ஊட்டி: ஊட்டி நகரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் வரும் 23ம் தேதி நடத்தப்படுகிறது. ஊட்டி நகர அனைத்து இந்து சமுதாய ஆன்மிக அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் எஸ்.பி.,க்கு கொடுத்துள்ள மனு:ஊட்டி நகர அனைத்து இந்து சமுதாய தலைவர்கள் சார்பில், கடந்த 6ம் தேதி நீலகிரி மாவட்ட எஸ்.பி.,க்கு, அளித்த மனு தொடர்பான கூட்டம், ஊட்டி மேற்கு நகர போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. இதில், தேவாங்கர் திருமண மண்டபத்தில் விசர்ஜன ஊர்வலம் துவங்கி, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, புளூமவுண்டன், ஐந்துலாந்தர், மெயின்பஜார், மின்வாரிய ரவுண்டானா வழியாக பாறை முனீஸ்வரர் கோவிலில் ஊர்வலத்தை நிறைவு செய்ய, போலீசார் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கருத்தை ஏற்பது தொடர்பான இந்து அமைப்புகளின் கூட்டம் ஊட்டி ஆரியாசில் கூட்டம் நடந்தது. இதில், அனைத்து இந்து சமுதாய சங்கம், இந்து சேவா சங்கம், அனைத்து இந்துக்கள் ஒருங்கிணைப்பு சங்கம், சோழிய வேளாளர் சங்கம், ஆதிதிராவிடர் சங்கம், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., மராட்டிய கழகம் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊட்டி நகரில் 23 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலம் தேவாங்கர் திருமண மண்டபத்தில் துவங்கி, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, புளூமவுண்டன், ஐந்துலாந்தர், மெயின்பஜார், மின்வாரிய ரவுண்டானா, லோயர் பஜார், மார்க்கெட், மணிகூண்டு வழியாக ஏ.டி.சி., சுதந்திர திடலை அடைந்து அங்கு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஊர்வலப்பாதையில் செல்ல அனுமதி வழங்கி இந்துக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட, ஊட்டிஇந்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.