மயிலம் : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழா நேற்று நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. 10:00 மணிக்கு மலைக்கோவில் வளாகத்தில் இருந்து வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிகள் அக்னி குளத்திற்கு மங்கள வாத்தியம் முழங்க புறப்பாடானது. குளத்தில் மகா தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பகல் 11:30 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 1.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதின திருமடத்தில் சுவாமி மூன்றாம் நாள் விழாவில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 9:00 மணிக்கு உற்சவர் மலை வலக்காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.