பதிவு செய்த நாள்
15
செப்
2012
11:09
தஞ்சாவூர்: விவசாயம், பயிர்கள் செழிக்க, போதிய மழை பெய்ய வேண்டி, தஞ்சை பெரிய கோவிலில் பிரகதீஸ்வரருக்கு, 1,008 குடங்களில், ஜல அபிஷேக சிறப்பு பூஜை நடந்தது.
தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாமல், நடப்பாண்டு பொய்த்து விட்டது. மேலும், மேட்டூர் அணை நிரம்பாததால், அணையில் தண்ணீர் திறப்பது, ஜூன், 6ம் தேதியிலிருந்து, செப்., 17ம் தேதிக்கு தள்ளி போயுள்ளது. ஆற்றுப் பாசனத்தில் தண்ணீரின்றி, டெல்டா பாசன மாவட்டங்களில் குறுவை பாசனம் பாதித்து, விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழகம் முழுவதும், மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவிலில், பிரகதீஸ்வரருக்கு வழக்கமாக, காலை, 7:30 மணிக்கு துவங்கி, 8:30 மணி வரை, பால், தயிர், சந்தனம், எண்ணெய் அபிஷேகம், ஒரு மணி நேரம் நடத்தப்படும். நடப்பாண்டு உரிய பருவத்தில், விவசாய பாசனத்துக்கு போதிய மழை பெய்ய வேண்டி, தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரருக்கு, வழக்கமான பூஜைகளுக்குப் பின், காலை, 8:30 மணிக்கு மேல், தேவாரம் முற்றோதல், 1,008 குடங்களில் சிறப்பு அபிஷேகம், அரைமணி நேரம் நடந்தது.