பதிவு செய்த நாள்
15
செப்
2012
10:09
மேலூர்: கிராம தெய்வத்திற்கு மது படைத்து குடும்பத்துடன் அருந்தி, வழிபடும் வழக்கம் மதுரை மேலூர் அருகே எட்டிமங்கலத்தில் தொன்று தொட்டு நடந்து வருகிறது. இங்குள்ள ஆதி திராவிடர்களில் சிலர், மந்தை முனிச்சாமி கோயிலில் திரண்டனர். கைகளில் ஏராளமான சேவல்களை பிடித்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். தலைகளில் பூஜை பொருட்களை சுமந்து கொண்டு, 2 கி.மீ., தூரத்திலுள்ள உடைகுளத்து கண்மாய் கரைக்கு சென்றனர். அங்கு மரத்திற்கு கீழ் உள்ள குல தெய்வம் சக்கிவீரனுக்கு, சேவல்களை பலி கொடுத்தனர். பின் அவற்றை சிலர் சுத்தம் செய்ய, சிலர் அடுப்பை உருவாக்கி சமைத்தனர். கொண்டு சென்ற மது பாட்டில்களை, தேங்காய், பழங்களுடன் படையல் போல் சாமி முன்பு அடுக்கினர். பூஜாரி வந்து சாமி ஆடி தீபாரதனை காட்டியதும், மதுவை உற்சாகமாக குடித்து, இறைச்சியை சுவைத்தனர்.
பூஜாரி முருகன் கூறியதாவது: ஆவணியில், பல ஆண்டுகளாக முன்னோர் செய்து வந்ததை நாங்கள் செய்கிறோம். அனைத்து சமுதாயத்தினரும் இதில் கலந்து கொள்வர். நேர்த்தி கடனாக விடப்படும் சேவல்களை, இங்கு பலி கொடுத்து உணவாக சமைக்கிறோம். ஆண்கள் மட்டும் சாமி கும்பிடலாம், என்றார்.