அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே விஜயநகர பேரரசு கால நடுக்கல் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே தோணுகால் கிராமத்தில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர பேரரசு கால நடுக்கல் சிற்பத்தை, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரி உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது : பழங்கால முதலாக நம் முன்னோர்கள் போரிலோ, விலங்குகளுக்கு எதிரான சண்டையிலோ, மக்களுக்காக வீர தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு நடு கல் எடுக்கும் வழக்கம் சங்க காலம் முதலே இருந்து வந்துள்ளது. தற்போது கண்டறியப்பட்ட நடுக்கல்லும் அவ்வாறான செயல்களில் ஒன்றில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரனுக்கு நடுக்கல் எடுத்துள்ளனர். இந்த சிற்பம் 2 1/2 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு ஆண், அவரின் மனைவியின் உருவமும், 2 குடுவையும் செதுக்கப்பட்டுள்ளது. தன் கணவன் இறந்த துக்கம் காரணமாக உடன்கட்டை ஏறுவதும், சிலர் மறுக்கும் பட்சத்தில் அக்காலத்தில் மதுவை கொடுத்து அவர்களை தீயில் இட்டு சதி என்னும் உடன்கட்டை ஏறும் சடங்கை செய்வது உண்டு. அந்த வகையில் இந்த சிற்பத்தில் 2 மது குடுவைகள் இருவரின் கால்கள் இடையில் செதுக்கப்பட்டுள்ளது. திருமேனியிலும் ஆபரணங்கள் உள்ளன. வீரனின் வலது கையில் சிதைந்த நிலையில் ஆயுதம் இடம்பெற்றுள்ளது. பெண்ணின் கையில் மலர் செண்டு உள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகரப் பேரரசு காலத்தை சேர்ந்ததாக கருதலாம். என்று கூறினர்.