பதிவு செய்த நாள்
17
மார்
2023
02:03
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா நடத்துவது குறித்து, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, பங்குனி தேர்த்திருவிழா, வரும், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 2ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. இந்நிலையில், பங்குனி தேர்த்திருவிழா நடத்துவது குறித்து, கலந்தாய்வு கூட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் விமலா தலைமை வகித்தார். இதில், பேரூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் வருவாய்த்துறையினர், கோவில் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். இதில், 10 நாட்களும் திருவிழாவை வெகுவிமர்சையாக நடத்த வேண்டும். தேர் சுற்றிவரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வானவேடிக்கை நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.