பதிவு செய்த நாள்
17
மார்
2023
06:03
அவிநாசி: அவிநாசியில் புகழ்பெற்ற லிங்கேஸ்வரர் கோவில் தேர் வலம் வரும் ரத வீதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை அகற்ற கோரிக்கை. தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்றாவது பெரிய தேரும்,சுந்தரமூர்த்தி நாயனாரால்,பாடல் பெற்ற தலமாகவும்,கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
சித்திரை மாதத்தில் தொடங்கும் தேர் திருவிழாவானது பெரிய தேர் இரண்டு நாட்களும், அம்மன் தேர் ஒரு நாள், தெப்பத்தேர்என பக்தர்கள் வருகையால் அவிநாசி நகரமே விழா கோலம் கலை கட்டி இருக்கும். இத்தேர் திருவிழாவை காண திருப்பூர், ஈரோடு,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.சோமாஸ்கந்தர் எழுந்தருளும் பெரிய தேர் மற்றும் அம்மன் எழுந்தருளும் சிறிய தேரும் நான்கு ரத வீதிகளான மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி உள்ளிட்ட வீதிகள் வழியாக நிலை வந்து சேருகிறது.
இந்நிலையில் வடக்கு ரத வீதியிலும், கிழக்கு ரத வீதியிலும் ஆடு,கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் இயங்கி வருகிறது.இந்துப் பண்டிகை காலங்களில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருவதால் நிரந்தரமாக தேர் ரத வீதிகளில் இறைச்சிக்கூடங்கள் செயல்படுவதால் பக்தர்கள் மனம் புண்படுகின்றது. மேலும்,ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ளதால் மேற்கண்ட வீதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை நிரந்தரமாக அகற்றி மாற்று இடத்தில் செயல்பட ஏற்பாடு செய்ய பேரூராட்சி செயல் அலுவலருக்கு ஹிந்து மக்கள் கட்சியின் ஹனுமன் சேனாமாநிலச் செயலாளர் தியாகராஜன் மனு கொடுத்துள்ளார். இம்மனு மீதான கோரிக்கை குறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமியிடம் கேட்டபோது, சென்ற வருடத்தில் தான் இறைச்சி கடைகளுக்கு ஏலம் நடைபெற்று,மூன்றாண்டுகளுக்கு ஏலத்தை புதுப்பித்து தரப்பட்டுள்ளது. தற்போது பேரூராட்சிக்கு 3 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கத்தொகையை முழுமையாக செலுத்தியுள்ளனர். இன்னும் இரண்டு வருட காலத்தில் இறைச்சிக் கடைகளுக்கான ஏல கெடு முடிந்து விடும். அதன் பிறகு உரிமையாளர்களிடம் கூறி கடைகள் மாற்று இடத்தில் செயல்படுத்த அறிவிப்பு பேரூராட்சி மூலம் தரப்படும் என்றார்.