பதிவு செய்த நாள்
24
மார்
2023
10:03
திருத்தணி: திருத்தணி, காந்தி நகர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தீமிதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான தீமிதி விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜையுடன் துவங்கியது.நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் டிராக்டரில் எழுந்தருளினார். பின், திருத்தணி முழுதும் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் 29ம் தேதி, பகல் 11:00 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாணம், இம்மாதம் 31ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணம், ஏப்.3ம் தேதி அர்ச்சுனன் தபசு, ஏப்.9ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. அடுத்த மாதம், 10ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி திருவிழா நிறைவடைகிறது. நேற்று முதல், அடுத்த மாதம் 10ம் தேதி வரை தினமும் காலையில் மூலவருக்கு சந்தான காப்பு நடைபெறும். மேலும், இம்மாதம் 27ம்தேதி முதல், ஏப்.9ம் தேதி வரை தினமும், இரவு 10:00 மணிக்கு மஹா பாரத நாடகம் நடைபெறும்.