பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி கடைசி ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகமானோர் வந்து நாகராஜரை தரிசித்து செல்வது வழக்கம். இவற்றில் ஆவணி மாதம் சிறப்பாக கருதப்படுவதால் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்து சென்றனர். ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் இருந்தே நாகராஜா கோயிலில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தரிசனம் செய்து சென்றனர். குறிப்பாக குடும்பத்துடன் ஏராளமானோர் வந்ததால் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும், சுற்றுலா வந்த வெளிமாநில பக்தர்களும் அதிகமானோர் கோயிலுக்கு சென்று சமாதரிசனம் செய்தனர். நாகராஜா கோயிலில் சிறப்பு பூஜைமுறையான நாகபூஜை, மற்றும் நாகர் சிலைக்கு பால், மஞ்சள் அபிஷேக நேர்த்திக்கடனை பெண்கள் செய்தனர். ஆவணி கடைசி ஞாயிறை முன்னிட்டு பொதுப்பணித்துறை நீர்ஆதார அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னதானத்தை வனத்துறை அமைச்சர் பச்சைமால் துவக்கி வைத்தார். நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., குமரி பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, பொதுப்பணித்துறை நீர்ஆதார செயற்பொறியாளர் சுப்பிரமணியம், பி.ஆர்.ஓ. ஹரிராம், உதவி செயற்பொறியாளர்கள் கிறிஸ்துநேசகுமார், மலையரசன், சுப்பிரமணியம், ரமேஷ் உட்பட ஏராளமானோர் அன்னதானத்தில் கலந்துகொண்டனர். கோயிலில் நேற்று மாலை பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். மேலும் இரவில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகமானோர் வெகுநேரமாக காத்திருந்தனர். நாகராஜா கோயில், மற்றும் வளாக பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்று காலையில் இருந்து இரவு வரை நாகராஜா கோயிலை சுற்றியுள்ள ரோடுகளில் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. போக்குவரத்தை சீரமைக்கவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.