பதிவு செய்த நாள்
21
செப்
2012
11:09
திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகுதியில் முழுகடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் சப்ளைக்கு கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய மூதலீடு ஆகியவற்றை கண்டித்து நேற்று திருச்செந்தூர் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டேக்கள் ஓடவில்லை, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. திருச்செந்தூர் பகத்சிங் பஸ்ஸ்டாண்டிலிருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று பஸ் மறியல் செய்ய முயன்ற பல்வேறு கட்சியைச் சேரந்த 85 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தவைர் காமராசு கோரிக்கைகள் குறித்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேச ஆதித்தன், மா.கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், தேமுதிக ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், காயல்பட்டிணம் நகர செயலாளர் சதக்கத்துல்லா, திருச்செந்தூர் நகர செயலாளர் சேகர், தலைவர் ராமன், பொருளாளர் வீரமணி, மதிமுக ஒன்றியச் செயலாளர் வித்யாசுரேஷ், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொறுப்பாளர் தமிழ்பரிதி, பாமக ஒன்றிய பொறுப்பாளர் சிவபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பக்தர்கள் கடும் அவதி:திருச்செந்தூரில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடந்ததால் நகர் மற்றும் கோயில் அருகில் உள்ள அனைத்து ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கு கூட ஓட்டல்கள், டீக்கடைகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கமாக வழங்கப்படும் அன்னதானத்தை விட நேற்று கூடுதலாக கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.